| ADDED : பிப் 13, 2024 06:45 AM
பல்லாரி: ராஜ்யசபா, லோக்சபா தேர்தலில் போட்டியிட, காங்கிரசில் சீட் கேட்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலர் சீட் கேட்டு தங்கள் 'காட் பாதர்களை' சுற்றிச்சுற்றி வருகின்றனர்.கர்நாடக அரசியலில் கவனத்தை ஈர்த்த மாவட்டம் பல்லாரி. லோக்சபா தேர்தல் போட்டியிட, காங்கிரசில் பலர் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.இவர்களில் எம்.எல்.ஏ.,க்களின் மகன், மகள்கள், அமைச்சர்களின் சகோதரர்கள், முன்னாள் எம்.பி.,க்கள், காங்கிரஸ் தலைவர்கள் உட்பட பலர் மத்திய, மாநில அளவில் காய் நகர்த்தி வருகின்றனர்.தற்போது மாநிலத்தின் நான்கு ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களில் பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினரான நசீர் உசேன் பதவியும் காலியாகிறது. இவர், மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக விரும்புகிறார். ஏற்கனவே அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் உட்பட பல்வேறு பதவிகளை இவர் வகித்துள்ளார்.இதனால் இம்முறை மாவட்ட தலைவர் முகமது ரபீக்கிற்கு ராஜ்யசபா சீட் வழங்க கட்சி மேலிடம் ஆலோசிப்பதாக தெரிகிறது. நசீர் உசேனும் முட்டி மோதுகிறார்.இவர்களைத் தவிர, சந்துார் எம்.எல்.ஏ., துக்காராம் மகள் சைதன்ய குமாரி, அமைச்சர் நாகேந்திரா சகோதரர் வெங்கடேஷ் பிரசாத், முன்னாள் எம்.பி., உக்ரப்பா, விஜயநகரா மாவட்ட தலைவர் குஜ்ஜல் நாகராஜா ஆகியோரும் ராஜ்யசபா அல்லது பல்லாரி லோக்சபா தொகுதி சீட் கேட்டு வருகின்றனர்.அதேவேளையில், அமைச்சர் நாகேந்திராவை, பல்லாரி தொகுதியில் களமிறக்க கட்சி மேலிடம் ஆலோசிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.பல்லாரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முகமது ரபீக் கூறியதாவது:ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். இது குறித்து ஏற்கனவே கட்சி மேலிட தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்.பல்லாரி லோக்சபா தேர்தலில் போட்டியிட, காங்கிரசில் ஏராளமானோர் ஆர்வத்துடன் உள்ளனர். யாருக்கு சீட் கொடுத்தாலும், கட்சியின் வெற்றிக்கு பாடுபடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.