உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொய் பரப்பும் அமெரிக்க அமைப்பை திருத்த முடியாது! மத சுதந்திர அறிக்கையால் அரசு ஆவேசம்

பொய் பரப்பும் அமெரிக்க அமைப்பை திருத்த முடியாது! மத சுதந்திர அறிக்கையால் அரசு ஆவேசம்

புதுடில்லி: 'இந்தியாவில் மத சுதந்திரம் கவலை அளிப்பதாக உள்ளது. வெளிநாடுகளில் பிரிவினைவாதிகள் கொல்லப்படுவதால், இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான, 'ரா' மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்' என, சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க கமிஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் உள்ளதால், இந்த அமைப்பின் உண்மையான நோக்கம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த, யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப்., எனப்படும் சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க கமிஷன், 2025ம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுஉள்ளது. அந்த அறிக்கையில், 'இந்தியாவில் மத சுதந்திரம் கவலை அளிப்பதாக உள்ளது. சிறுபான்மையினர் தொடர்ந்து மோசமாக நடத்தப்படுகின்றனர். மத சுதந்திரத்தை மீறுவதால், இந்தியாவை, கவலைக்குரிய நாடாக அறிவிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

உள்நோக்கம்

மேலும், 'இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான, 'ரா', வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் பயங்கரவாதிகள் உள்ளிட்டோர் கொலையில் ஈடுபட்டுள்ளது. அதனால், 'ரா' அமைப்பின் மீது குறிப்பிட்ட பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவர் சார்ந்துள்ள பா.ஜ., தொடர்ந்து முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்தி, பொய் தகவல்களை பரப்பி வருகின்றனர்' என, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்து, நம் வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கை:

இந்த அமைப்பின், 2025ம் ஆண்டுக்கான அறிக்கையைப் பார்த்தோம். அது மீண்டும் இந்தியாவுக்கு எதிராக பாரபட்சமாகவும், அரசியல் நோக்கத்துடன் கூடிய அனுமானங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. ஏதோ ஒரு உள்நோக்கத்துடன், இந்த அமைப்பு மீண்டும் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.ஏதோ அங்கொன்றும், இங்கொன்றும் நடக்கும் சம்பவங்களை, நாடு முழுதும் சிறுபான்மையினருக்கு எதிராக நடவடிக்கைகள் நடப்பதாக, பூதாகாரமாக்க பார்க்கின்றனர். மத சுதந்திரம் தொடர்பாக உண்மையான அக்கறையுடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாக தெரியவில்லை.

வெற்றி பெறாது

இந்தியா, 140 கோடி மக்களைக் கொண்டது. மனித குலம் அறிந்துள்ள அனைத்து மதத்தினரும் இங்கு உள்ளனர். ஆனால், இந்தியாவின் இந்த பன்முகத்தன்மையை, வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற நல்லிணக்கத்துடன் செயல்படும் பாரம்பரியத்தை, இந்த அமைப்பு கவனிக்கவில்லை.உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ளாமல், தெரிந்துகொள்ள முயற்சியும் செய்யாமல், இந்த அமைப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பிடம் இருந்து, உண்மையான அறிக்கையை எதிர்பார்க்க முடியாது என்பதை உணர்கிறோம். இதற்கு முன்பும் இதுபோலவே, பொய்யான தகவல்களின் அடிப்படையிலேயே, அறிக்கைகளை வெளியிட்டு வந்துள்ளது.உண்மையில் இந்த அமைப்பின் நோக்கம் தான் கவலைக்குரியதாக உள்ளது. இந்த அமைப்பை, கவலைக்குரிய அமைப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமாக இருக்கும், அஹிம்சையை கடைப்பிடிக்கும் இந்தியாவுக்கு எதிராக நடக்கும் எந்த முயற்சிகளும் வெற்றி பெறாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த அமைப்பின் பரிந்துரைகள், அமெரிக்க அரசைக் கட்டுப்படுத்தாது. அதனால், 'ரா' அமைப்பின் மீது பொருளாதார தடை போன்ற நடவடிக்கைகளை அமெரிக்க அரசு எடுப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 27, 2025 15:43

நம்ம திராவிட கட்சிகள் சிறுபான்மையினரை எவ்வளவு செல்லமாக பார்த்து கொண்டு உள்ளது. இதை பார்த்துமா இந்த அமெரிக்கா காரனுக்கு சந்தேகம் ஷேம் ஷேம் பப்பி ஷேம்


சையது
மார் 27, 2025 11:57

நாங்கள் இங்கு ஒற்றுமையுடனும் சந்தோசத்துடன்தான் வாழ்கிறோம்.


Haribabu Poornachari
மார் 27, 2025 10:29

இஸ்லாமியர்களும், சிறுபான்மையினரும் மகிழ்ச்சியாக வாழும் நாடு உலகத்தில் இந்தியா மட்டும் தான். எந்த நாட்டில் சிறுபான்மையினர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என அவர்கள் சொல்லட்டும்.


R.RAMACHANDRAN
மார் 27, 2025 08:42

இந்தியா சகிப்பு தன்மையை கடைபிடித்தாலும் அரசியல் வாதிகள் வாக்கு வங்கிக்காக வெறுப்பு அரசியல் நடத்துவதால் அரசுக்கு இழுக்கு.


Kumar Kumzi
மார் 27, 2025 04:23

முஸ்லிம்களுக்கு இந்தியாவில் பிரச்சினையா ஹாஹாஹா அட பன்னாடைகளா பக்கத்து நாடுபங்களாதேஷிஸில் இந்துக்களுக்கு நடக்கும் கொடுமைகள் உங்களின் கண்களுக்கு தெரியவில்லையா...த்தூ