ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் இந்திய எம்.பி.,க்கள் பங்கேற்பு
புதுடில்லி:அமெரிக்காவில் நடக்கும் ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில், நம் நாட்டின் சார்பில் பா.ஜ., - எம்.பி.,க்கள் பி.பி.சவுத்ரி, டகுபதி புரந்தேஸ்வரி ஆகியோர் தலைமையிலான இரண்டு குழுக்கள் பங்கேற்க உள்ளன. அமெரிக்காவின் நியூயார்க்கில், ஐ.நா., பொது சபையின் 80வது கூட்டம் நடந்து வருகிறது. இதில், நம் நாட்டைச் சேர்ந்த பல கட்சி எம்.பி.,க்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக பா.ஜ., - எம்.பி.,க்கள் தலைமையிலான இரு குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் வரும் 14ம் தேதி வரையிலான கூட்டத்தில் எம்.பி., சவுத்ரி தலைமையிலான குழு பங்கேற்கிறது. இதில், பா.ஜ.,வின் அனில் பலூனி, நிஷிகாந்த் துபே, உஜ்வல் நிகாம், காங்கிரசை சேர்ந்த விவேக் தன்ஹா, குமாரி செல்ஜா, சமாஜ்வாதி கட்சியின் ராஜிவ் ராய், புரட்சிகர சோஷலிச கட்சியைச் சேர்ந்த பிரேமசந்திரன் உட்பட 15 பேர் இடம்பெற்றுள்ளனர். அக்., 27ல் துவங்கும் கூட்டத்தில், பா.ஜ-., - எம்.பி., டகுபதி புரந்தேஸ்வரி தலைமையிலான குழு பங்கேற்கிறது. இதில், அக்கட்சியைச் சேர்ந்த வி.டி.சர்மா, திலீப் சாய்கியா, ரேகா சர்மா, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மனோஜ் குமார் ஜா, தி.மு.க.,வின் வில்சன், தமிழ் மாநில காங்கிரசின் ஜி.கே.வாசன், ஆம் ஆத்மியைச் சேர்ந்த சந்தீப் குமார் பதக் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.