மேலும் செய்திகள்
அதிகாரி தற்கொலை; எஸ்.ஐ.ஆர்., பணி பாதிப்பு
2 hour(s) ago
அதிகாரி தற்கொலை எஸ்.ஐ.ஆர்., பணி பாதிப்பு
4 hour(s) ago | 1
சவுதி அரேபியா விபத்தில் 45 இந்தியர் பலி
5 hour(s) ago | 2
ராகுல் காரணமல்ல!
5 hour(s) ago
பத்தனம்திட்டா: சபரிமலையில், துவாரபாலகர் சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க தகடுகள் அறிவியல்பூர்வ ஆய்வுக்காக நேற்று மீண்டும் அகற்றப்பட்டன. கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை, மண்டல பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி சுமந்து சென்று, சுவாமி அய்யப்பனை தரிசித்து வருகின்றனர். கோவில் கருவறைக்கு முன்பாக உள்ள துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்க தகடுகள், கடந்த 2019ம் ஆண்டு பராமரிப்பு பணிக்காக அகற்றப்பட்டன. தங்க முலாம் பூசிய பின், மீண்டும் தங்க தகடுகள் அணிவிக்கப்பட்டபோது, 4 கிலோ அளவுக்கு தங்கம் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல், கருவறை கதவில் உள்ள தங்கமும் திருடு போனதாக புகார் கூறப்பட்டது. கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு, பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி, தேவசம் போர்டு முன்னாள் தலைவர் வாசு மற்றும் மூன்று நிர்வாகிகளை கைது செய்தனர். இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி, தேவ பிரசன்னத்திற்கு பின், துவாரபாலகர் சிலைகள் மற்றும் கோவில் கருவறையின் பிரதான கதவுகளில் உள்ள தங்க தகடுகள் நேற்று மதியம் உச்ச பூஜைக்கு பின் நடை அடைக்கப்பட்டதும் அகற்றப்பட்டன. அவற்றை மற்றொரு அறைக்கு எடுத்துச் சென்ற சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், எடையை சோதித்து பார்த்து குறித்துக் கொண்டனர். நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, தங்க தகடுகளில் உள்ள தங்கத்தின் துாய்மை, தரம் ஆகியவற்றை கண்டறிய, அதன் மாதிரிகளையும் சேகரித்துக் கொண்டனர். அதேபோல், செப்பு தகடுகளின் தடிமன் பற்றி அறியவும், அதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதை வைத்து, தடயவியல் மற்றும் அறிவியல்பூர்வ சோதனை நடக்கவுள்ளது. இதில் கண்டறியப்படும் தகவல்களை கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாயமான தங்கத்தை மீட்டெடுக்கக்கோரியும், கோவிலின் புனிதத்தை மீட்டெடுக்க வலியுறுத்தியும், 1 கோடி அய்யப்ப பக்தர்களிடம் இருந்து கையொப்பம் பெறும் இயக்கத்தை, கேரள பா.ஜ.,வினர் நேற்று துவக்கினர். இதுகுறித்து மாநில பா.ஜ., பொதுச்செயலர் சுரேஷ் நேற்று கூறியதாவது: சபரிமலையை அழிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இடைத்தரகர்கள் மூலம் கோவிலின் புனிதத்தை கெடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது சபரிமலையில் தங்கம் மாயமான நிலையில், இவ்விவகாரத்தை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலும், சபரிமலையை மீட்டெடுக்கக்கோரியும் கையெழுத்து இயக்கத்தை துவக்கி உள்ளோம். சபரிமலையை பாதுகாக்கும் வகையில் கேரள மக்களிடம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் சபரிமலைக்கு தரிசனம் மேற்கொள்ள வரும் தமிழகம் மற்றும் ஆந்திர பக்தர்களிடம் இருந்தும் கையெழுத்து பெற உள்ளோம். சேகரிக்கப்பட்ட கையெழுத்துகள், பிரதமர் மோடியிடம் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago
4 hour(s) ago | 1
5 hour(s) ago | 2
5 hour(s) ago