உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லட்சுமணன் உருவாக்கிய இர்ப்பு நீர் வீழ்ச்சி

லட்சுமணன் உருவாக்கிய இர்ப்பு நீர் வீழ்ச்சி

மடிகேரி இயற்கையின் தாயகம். மனதுக்கு இதமளிக்கும் பல்வேறு இடங்கள் இங்குள்ளன. மடிகேரி என்ற பெயரை கேட்டாலே மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். இதனால் உள்நாடு, வெளிநாடுகளின் சுற்றுலா பயணியர் இங்கு குவிகின்றனர்.குடகு மாவட்டத்தில், எண்ணிலடங்கா நீர் வீழ்ச்சிகள் உள்ளன. ஆனால், இர்ப்பு நீர்வீழ்ச்சி மாறுபட்டது. இது புனிதமான நீர்வீழ்ச்சியாக கருதப்படுகிறது. பசுமையான இயற்கை காட்சிகள் நிறைந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சென்றால் மனதுக்கு அமைதி, நிம்மதி கிடைக்கும். ஏதோ ஒரு சக்தி நம்மை கஷ்டங்களில் இருந்து விடுவித்த அனுபவம் ஏற்படும்.இர்ப்பு நீர் வீழ்ச்சி ராமாயணத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. ராவணனால் கடத்தப்பட்ட சீதையை தேடி, ராமன், லட்சுமணன் மற்றும் வானர படையுடன் செல்கிறார். பிரம்மகிரி மலை அடிவாரத்துக்கு வருகின்றனர். அனைவரும் இந்த மலையை தாண்டி முன்னோக்கி செல்கின்றனர். ஆனால் லட்சுமணன் மட்டும் சோர்வடைந்து அங்கேயே அமர்கிறார். அந்த இடமே இர்ப்பு என, அழைக்கப்படுகிறது.தன் செயலுக்கு வருத்தமடைந்த அவர், ராமனிடம் மன்னிப்பு கேட்கிறார். அதே வேதனையில் அக்னி குண்டம் அமைத்து, தீ மூட்டி தீக்குளிக்க முடிவு செய்கிறார். இவரை ராமன் சமாதானம் செய்கிறார். அதன்பின் லட்சுமணன், தான் அமைத்த அக்னி குண்டத்தை, அம்பை ஏவி நீர் வீழ்ச்சியை உருவாக்கி தீயை அணைக்கிறார். அன்று லட்சுமணன் உருவாக்கிய நீர் வீழ்ச்சியே இர்ப்பு நீர் வீழ்ச்சியாகும். இதற்கு ராமனே 'லட்சுமண தீர்த்தம்' என, பெயர் வைத்ததாக ஐதீகம்.இர்ப்புவில் உள்ள ராமேஸ்வரர் கோவில், கேரள பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலஸ்தானம் வட்ட வடிவில் மிகவும் அழகாக தென்படுகிறது. குடகு மாவட்டத்தின் மற்ற கோவில்களை விட, ராமேஸ்வரர் கோவில் முற்றிலும் வித்தியாசமானது.அடர்ந்த வனப்பகுதியில், மலைகளுக்கு நடுவே இர்ப்பு நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. பேரிரைச்சலுடன் கீழே பாய்ந்து விழுகிறது. விசாலமான வயல்களுக்கு நடுவே அமைந்துள்ள ராமேஸ்வரா கோவில் மணி சத்தம் மனதுக்கு அமைதி அளிக்கும். கோவில் வளாகத்தில் அசோக மரம், மலை அடிவாரத்தில் உள்ள குகை மக்களை வெகுவாக ஈர்க்கிறது.

எப்படி செல்வது?

மடிகேரியில் இருந்து 85 கி.மீ., தொலைவில், இர்ப்பு நீர் வீழ்ச்சி உள்ளது. மடிகேரி வழியாக வருவோர் மூர்னாடு, விராஜ்பேட், கோணிகொப்பா, ஸ்ரீமங்களா வழியாகவும்; மைசூரில் இருந்து வருவோர் ஹுன்சூர், பஞ்சவள்ளி, கோணிகொப்பா அல்லது நாகரஹொளே வழியாகவும் வரலாம். அரசு பஸ், தனியார் வாகனங்கள், ரயில் போக்குவரத்தும் உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ