உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 186 சொகுசு கார்கள் வாங்கி ரூ.21 கோடி தள்ளுபடி அள்ளிய ஜெயின் சமூகத்தினர்

186 சொகுசு கார்கள் வாங்கி ரூ.21 கோடி தள்ளுபடி அள்ளிய ஜெயின் சமூகத்தினர்

ஆமதாபாத்: வணிகத்தில் கோலோச்சி வரும் ஜெயின் சமூகத்தினர் தங்கள் கூட்டமைப்பின் வாயிலாக 'மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, பி.எம்.டபிள்யு.,' போன்ற, 186 சொகுசு கார்களை பேரம் பேசி வாங்கியதன் வாயிலாக, 21 கோடி ரூபாய் தள்ளுபடி பெற்று பயனடைந்துள்ளனர். உலகம் முழுதும் வசிக்கும் ஜெயின் சமூகத்தினரை ஒன்றிணைக்கும் முயற்சியாக, ஜெ.ஐ.டி.ஓ., எனப்படும், ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பு துவங்கப்பட்டது. நாடு முழுதும், 65,000 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பு, அச்சமூகத்தினர் இடையே வணிக நடவடிக்கைகளை வழங்கி வருவதுடன், கல்வி மற்றும் சமூக பொறுப்பு போன்ற பல்வேறு திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பு தங்கள் உறுப்பினர்களுக்கு சொகுசு கார்களை குறைந்த விலைக்கு வாங்கித் தரும் நடவடிக்கை எடுத்தது. இதன்படி பிரபல சொகுசு கார்களின் டீலர்களின் ஒத்துழைப்புடன், 'பி.எம்.டபிள்யு., ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ்' போன்ற நிறுவனங்களின் கார்களை தங்கள் உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் பெற்று தந்தது. ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் நடவடிக்கையால், கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை பிரபல நிறுவனங்களிடம் இருந்து தங்கள் உறுப்பினர்களுக்கு தலா, 60 லட்சம் முதல் 1.3 கோடி ரூபாய் மதிப்பிலான மொத்தம், 186 சொகுசு கார்கள் வாங்கப்பட்டன. மொத்தமாக வாங்கியதால், கூட்டமைப்பின் வாயிலாக பேரம் பேசி, 21 கோடி ரூபாய் தள்ளுபடி பெற்றுள்ளனர். இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ஹிமான்சு ஷா கூறுகையில், “எங்கள் உறுப்பினர்களுக்கு உதவும் வகையில், பிரபல சொகுசு கார் நிறுவனங்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு கார்களை பெற்று தந்தோம். இதை, நாங்கள் லாப நோக்கமின்றி மேற்கொண்டோம். இதன் வாயிலாக ஒவ்வொரு உறுப்பினரும், 8 லட்சம் முதல், 17 லட்சம் ரூபாய் வரை சேமித்து பயனடைந்துள்ளனர்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை