| ADDED : மே 29, 2025 12:57 AM
ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் அரசின் திறன் மேம்பாட்டு இயக்குநரகம், தமிழகத்தின் ஆசிரியர் - மாணவர் திறன் வளர்ச்சி நிறுவனமான ஐ.சி.டி., அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள ஐ.சி.டி., அகாடமி மத்திய மற்றும் மாநில அரசின் உதவியுடன் செயல்படும் லாப நோக்கமற்ற நிறுவனம். தொழில்துறைக்கு எத்தகைய திறனுடையவர்கள் தேவை என்பதை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உயர்மட்ட பயிற்சி வாயிலாக இந்நிறுவனம் விளக்குகிறது. அதற்கு ஏற்ப கற்பித்தலை மாற்றியமைக்கிறது. இந்நிறுவனத்துடன் ஜம்மு - காஷ்மீர் அரசு ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுஉள்ளது. தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் நிர்வாகவியல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொழில்துறைக்கு ஏற்ற பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் கிடைக்கும். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாலிடெக்னிக் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களே இத்திட்டத்தின் இலக்கு.புரிந்துணர்வு ஒப்பந்தப்படி ஐ.சி.டி., அகாடமி, ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இரண்டு முதல் ஆறு உயர்மட்ட பயிற்சித் திட்டங்களை நடத்தும். அதில் வளர்ந்து வரும் தொழில்துறை தரநிலைகளுக்கு ஏற்ப கற்பித்தல் முறைகள் மாற்றியமைக்கப்படும். திறன் வளர்ச்சி மற்றும் ஆசிரியர் மேம்பாட்டுக்கு இந்த ஒப்பந்தம் நிலையான சூழலை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.