உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனித தவறா; தொழில்நுட்ப கோளாறா? ரயில் விபத்து விவகாரத்தில் குழப்பம் நீடிப்பு

மனித தவறா; தொழில்நுட்ப கோளாறா? ரயில் விபத்து விவகாரத்தில் குழப்பம் நீடிப்பு

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் நேற்று முன்தினம் நடந்த ரயில் விபத்துக்கு காரணம், மனித தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.திரிபுராவின் அகர்தலாவில் இருந்து, மேற்கு வங்கத்தின் கோல்கட்டா அருகே உள்ள சீல்தா ரயில் நிலையம் நோக்கி, கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் காலை வந்து கொண்டிருந்தது. ராணிபத்ரா - சத்தார் ஹாட் வழித்தடத்தில் சிக்னலுக்காக எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்த போது பின்னால் வந்த சரக்கு ரயில், கஞ்சன்ஜங்கா ரயில் மீது மோதியது.மோதிய வேகத்தில், எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது சரக்கு ரயில் ஏறி நின்றது. இந்த பயங்கர விபத்தில், சரக்கு ரயிலின் டிரைவர்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டு உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

எழுத்துப்பூர்வ ஆவணம்

சரக்கு ரயில் டிரைவர் சிக்னலை கவனிக்காமல் வந்ததே விபத்துக்கு காரணம் என முதலில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் நடந்த விசாரணையில், ராணிபத்ரா - சத்தார் ஹாட் ரயில் தடத்தில் காலை 5:55 மணி முதல் சிக்னல் பழுதடைந்தது தெரியவந்தது. இந்த வழித்தடம் இடையே ஒன்பது சிக்னல்கள் உள்ளன. சிக்னல்கள் பழுதடையும் நேரத்தில், ஸ்டேஷன் மாஸ்டரிடம் இருந்து டி.ஏ.912 என்ற எழுத்துப்பூர்வ ஆவணம் ரயில் டிரைவர்களுக்கு வழங்கப்படும்.அந்த ஆவணம் வழங்கப்பட்டால், குறிப்பிட்ட ரயில் சிக்னலில் சிவப்பு விளக்கு ஒளிர்ந்தாலும் நிறுத்தாமல் பயணத்தை தொடரலாம் என்பது ரயில்வே விதி. அந்த ஆவணத்தை பெற்றுக் கொண்ட காரணத்தாலேயே சரக்கு ரயில் டிரைவர் ரயிலை நிறுத்தாமல் சிக்னல்களை கடந்து சென்றார் என கூறப்படுகிறது. அதே நேரம், டி.ஏ.912 ஆவணம் வைத்துள்ள டிரைவர், முன்னால் செல்லும் ரயிலில் இருந்து 150 மீட்டர் இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் என்பது விதி.மேலும், ஒவ்வொரு சிக்னலை தாண்டும் போதும், ரயிலை மணிக்கு 10 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். பகல் நேரமாக இருந்தால் சிக்னலை கடந்ததும் ரயிலை, 1 நிமிடம் நிறுத்திவிட்டு பின் பயணத்தை தொடர வேண்டும். இரவாக இருந்தால், 2 நிமிடங்கள் நிறுத்திவிட்டு பின் பயணத்தை தொடர வேண்டும். சரக்கு ரயில் டிரைவர் இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.மேலும், முன்னால் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் சென்றதை அறிந்த நிலையிலும், டி.ஏ.912 ஆவணத்தை வழங்கிய ஸ்டேஷன் மாஸ்டர், எந்த அடிப்படையில் அதை அளித்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளை முன்னால் சென்ற கஞ்சன்ஜங்கா ரயில் அந்த ரயில்வே பிரிவை கடந்து அடுத்த பிரிவுக்கு சென்றிருக்க கூடும் என நினைத்து, அவர் ஆவணம் வழங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பாதுகாப்பு

அதோடு, முன்னால் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் எதற்காக நடுவழியில் நிறுத்தப்பட்டது என்ற கேள்விக்கும் விடை கிடைக்கவில்லை. விபத்துக்கு காரணம் மனித தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறா என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், வடகிழக்கு ரயில்வே பிராந்தியத்தின் பாதுகாப்பு பிரிவு தலைமை கமிஷனர் ஜனக் குமார் கர்க், விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையை இன்று துவங்க உள்ளார். இந்த விசாரணையில் விபத்துக்கான உண்மையான காரணம் வெளிவரும் என நம்பப்படுகிறது.

காலையில் அப்படி!

நேற்று முன்தினம் விபத்து நடந்த அடுத்த சில மணி நேரங்களில், ரயில்வே வாரிய தலைவர் ஜெயா வர்மா சின்ஹா டில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “சரக்கு ரயிலின் டிரைவர், சிக்னலை மதிக்காமல் சென்றதே விபத்துக்கு காரணம் என, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்தப்படும்,” என்றார்.

மாலையில் இப்படி!

நேற்று முன்தினம் மாலையில், ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிக்கையில், 'கஞ்சன்ஜங்கா ரயில் சென்ற வழித்தடத்தில், அதிகாலையில் இருந்தே சிக்னல்கள் செயல்படவில்லை. சிக்னல்கள் பழுதடையும் நேரத்தில், ஸ்டேஷன் மாஸ்டரிடம் இருந்து டி.ஏ.912 என்ற எழுத்துப்பூர்வ ஆவணம் ரயில் ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும். இந்த ஆவணம் வழங்கப்பட்டால், குறிப்பிட்ட ரயில் சிக்னலில் சிவப்பு விளக்கு ஒளிர்ந்தாலும் நிறுத்தாமல் பயணத்தை தொடரலாம் என்பது ரயில்வே விதி. அந்த ஆவணத்தை பெற்றுக் கொண்ட காரணத்தினாலேயே சரக்கு ரயில் டிரைவர் ரயிலை நிறுத்தாமல் சிக்னல்களை கடந்து சென்றார். ஆனால், அவர் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் செல்லாமல், அதிவேகத்தில் சென்றது தான் விபத்துக்கு காரணம்' என, தெரிவிக்கப்பட்டது.

லோகோ பைலட்டுகள் சொல்வது என்ன?

அகில இந்திய லோகோ பைலட் சங்கத்தைச் சேர்ந்த நாயுடு பூஷன் தத்தா கூறுகையில், “விசாரணை முடிவடைவதற்கு முன்பே, சரக்கு ரயில் டிரைவர் தான் விபத்துக்கு காரணம் என கூறுவதை ஏற்க முடியாது. லோகோ பைலட்டுகளுக்கான, 18,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பாமல், பணியில் உள்ள லோகோ பைலட்டுகளை கூடுதல் நேரம் வேலை வாங்குகின்றனர்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

ராமமூர்த்தி
ஜூன் 20, 2024 06:54

அமைச்சர் ராஜினாமா செய்வது அவசியம்.


ஜோதி
ஜூன் 19, 2024 21:33

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்கு காரணமான அந்த மின்னணுக்கள்தான் காரணம். கண்டு புடிச்சி சொல்லுவாங்க பாருங்க.


தமிழ்வேள்
ஜூன் 19, 2024 12:37

ரயில்வேயின் ஜெனரல் ரூல்ஸ் புத்தகம் [சுமார் 700 பக்கங்கள் கொண்டது] ஒவ்வொரு இயக்க ஊழியரும் எந்நேரமும் கையில் வைத்திருக்க வேண்டும் என்பதும், அதன் விதிகள் /திருத்தம் குறித்து ஒவ்வொரு ஆறாவது மாதமும் தேர்வு எழுதி வெற்றிபெற வேண்டும் பணி விதிகளில் ஒன்று. இவற்றை யாரும் பின்பற்றுவதாக தெரியவில்லை ..இந்த தேர்வு மற்றும் தேர்ச்சியை வருஷாந்திர சம்பள உயர்வோடு இணைக்கவேண்டும் ..அப்போதுதான் விதிகளை பற்றிய தெளிவு , அறிவு , பின்பற்றுதல் போன்றவை பழக்கத்துக்கு வரும் ....


ES
ஜூன் 19, 2024 12:17

This is on government they have failed. Who ever blaming others are totally deluded


ديفيد رافائيل
ஜூன் 19, 2024 11:05

எதுவாக இருந்தாலும் போனது மனித உயிர். இனிமே கண்டிப்பா இறந்தவங்க திரும்ப முடியாது.


Lion Drsekar
ஜூன் 19, 2024 10:50

தொழில் நுட்ப கோளாறு என்றுதான் கூறவேண்டிய நிலை. காரணம் இரயில் ஓட்டியவர் பெயர் அவர் சார்ந்த.. இதில் பல இருக்கின்றன. அவ்வளவு எளிதாக தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. வந்தே மாதரம்


ஆரூர் ரங்
ஜூன் 19, 2024 10:33

சிக்னலை பேப்பர் ஒட்டி மறைக்கும் சதிவேலை வீடியோ வைரல்.


venugopal s
ஜூன் 19, 2024 10:24

எந்தக் காரணமாக இருந்தாலும் ஒன்று மட்டும் உறுதி, இதற்கு மத்திய பாஜக அரசின் கீழ் உள்ள ரயில்வே துறை பொறுப்பு அல்ல. அவ்வளவு தான்!


Sampath Kumar
ஜூன் 19, 2024 10:13

ரயில்வே துறையில் பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் லஞ்சம் ஏமாற்றுதல் வினாத்தாள் பேப்பர் அவுட் மற்றும் தெரு மையத்தில் கோப்பி அடிக்க விடுதல் போன்ற செயல்கள் மிக சர்வ சாதாரணமாக நாடி பெற்று வருகின்றது இதன் மூலம் தகுதியே இல்லாதவர்கள் பணியில் அமர்த்த படுகிறார்கள்


P. SRINIVASALU
ஜூன் 19, 2024 09:49

ஒன்றிய பிஜேபி அரசின் தோல்வி


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை