உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக அமைச்சரவை விரைவில் மாற்றம்! எம்.எல்.ஏ.,க்கள் டில்லியில் முகாம்

கர்நாடக அமைச்சரவை விரைவில் மாற்றம்! எம்.எல்.ஏ.,க்கள் டில்லியில் முகாம்

புதுடில்லி: கர்நாடக காங்கிரஸ் அரசின் இரண்டாம் பாதி ஆட்சி துவங்கவுள்ள நிலையில், அமைச்சரவை மாற்றத்துக்கு கட்சி மேலிடம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதனால், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கும் சித்தராமையாவே முதல்வராக தொடரவுள்ளார். அமைச்சரவையில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க முதல்வர் சித்தராமையா பரிசீ லித்து வருவதால், அமைச்சர் பதவிக்கு ஆசைப்படும் எம்.எல்.ஏ.,க்களும் தற்போது டில்லியில் முகாமிட்டுள்ளனர். கர்நாடகாவில் கடந்த 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்., வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் வெற்றிக்காக உழைத்த சிவக்குமார் முதல்வராக பதவியேற்க வேண்டும் என அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் பலர் குரல் எழுப்பினர். அதே சமயம் சீனியரான சித்தராமையாவுக்கே அந்த பதவி வழங்கப்படும் என கட்சி மேலிடம் கறாராக கூறி, பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைத்தது. தவிர, முதல் இரண்டரை ஆண்டுகள் சீனியரான சித்தராமையாவும், எஞ்சிய இரண்டரை ஆண்டுகள் சிவக்குமாரும் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும், அரசல், புரசலாக பேசப்பட்டது. இறுதி முடிவு இந்நிலையில், இந்த நவம்பருடன், முதல் இரண்டரை ஆண்டுகள் ஆட்சி நிறைவுக்கு வருவதால், கர்நாடக காங்., கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கேற்றபடி முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் டில்லியில் முகாமிட்டுள்ளனர். காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் தொடர்ந்து பேச்சு நடத்தினர். இதில், இறுதி முடிவு எடுக்கப்பட்ட நிலையில், கர்நாடக அமைச்சரவையை மாற்றி அமைக்க டில்லி மேலிடம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கும் சித்தராமையாவே முதல்வராக தொடரவுள்ளார். இதையடுத்து, சீனியர் அமைச்சர்கள் சிலரை நீக்கிவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க முதல்வர் சித்தராமையா ஆர்வம் காட்டுகிறார். அதே போல் அமைச்சர் பதவியை எதிர்பார்க்கும் எம்.எல்.ஏ.,க்களும் டில்லியில் முகாமிட்டுள்ளனர். கர்நாடக பவனில் தங்கியுள்ள முதல்வர் சித்தராமையாவை எம்.எல்.ஏ.,க்கள் தனித்தனியாக சந்தித்து, அமைச்சராகும் ஆசையை வெளிப்படுத்தினர். குறிப்பாக பிரதீப் ஈஸ்வர், அசோக் பட்டன், விஜயானந்த் காசப்பனவர், முதல்வரின் சட்ட ஆலோசகர் பொன்னண்ணா, அரசியல் ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி உள்ளிட்டோர் சித்தராமையாவை சந்தித்து தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். சர்ச்சைக்குரிய பேச்சால், அமைச்சர் பதவியை இழந்த ராஜண்ணாவுடன், முதல்வர் சித்தராமையா 20 நிமிடம் தனியாக ரகசிய பேச்சு நடத்தியுள்ளார். டில்லி செல்லும் முன்பே, ராஜண்ணா பலமுறை சித்தராமையாவை சந்தித்தார். அப்போது தனக்கு அமைச்சர் பதவி கிடைப்பதை விட, தன்னை பற்றி ராகுலுக்கு ஏற்பட்டுள்ள தவறான கருத்தை போக்குங்கள் என, வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது. பதவி கிடைக்கும் முதல்வரை சந்தித்த பின், எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர் அளித்த பேட்டி: நானும் அமைச்சர் பதவியை எதிர்பார்க்கிறேன். இதற்காகவே டில்லிக்கு வந்து, முதல்வர் சித்தராமையாவை சந்தித்தேன். பதவி கிடைக்கும் என நம்புகிறேன். எனக்கு அமைச்சர் பதவி வழங்கும்படி, முதல்வரிடம் மட்டுமின்றி, துணை முதல்வர் சிவகுமார், பொதுச் செயலர் வேணுகோ பால், தேசிய தலைவர் கார்கே உட்பட பலரிடமும் வேண்டுகோள் விடுத்தேன். சித்தராமையாவும், சிவகுமாரும் எனக்கு கடவுளை போன்றவர்கள். அவர்கள் இங்கிருக்கும் போது, நான் வேறு எங்கு செல்வது? இவ்வாறு அவர் கூறி னார்.

புரளிக்கு முற்றுப்புள்ளி

டில்லியில் காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன், துணை முதல்வர் சிவக்குமார் தனியாக சந்தித்து பேச்சு நடத்தினார். இதனால், முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா மாற்றப்படுவாரா என்ற பேச்சு எழுந்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் சிவகுமார் கூறியதாவது: கட்சி விவகாரங்கள் தொடர்பாகவே விவாதம் நடந்தது. அதற்காகவே டில்லி வந்தேன். கட்சி எங்கு கூடுகிறதோ, அங்கு தானே நாங்கள் அனைவரும் இருப்போம். மாநில தலைவர், தேசிய தலைவரை நேரில் சந்திப்பது என்பது வழக்கமான நடைமுறை. இதில், விசேஷம் ஒன்றும் இல்லை. கட்சி அலுவலக திறப்பு விழா போன்ற கட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டுமே விவாதித்தோம். அதை தவிர புதிதாக வேறு எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ