பஞ்சாப் மாநிலத்தின் சூப்பர் முதல்வர் கெஜ்ரிவால்! ஆடம்பர அரசு பங்களாவில் வசிப்பதாக பா.ஜ., குற்றச்சாட்டு
புதுடில்லி: “டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,வாகவோ அல்லது மாநில அரசில் ஏதாவது பதவி வகிப்பவராகவோ இல்லாவிட்டாலும், முதல்வர் பகவந்த் மான் தயவில், பஞ்சாபில் கெஜ்ரிவாலுக்கு சகல வசதிகளும் கொண்ட ஏழு நட்சத்திர அந்தஸ்துடைய பங்களா வழங்கப்பட்டுள்ளது,”என, பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் செஷாத் பூனாவாலா கூறினார். டில்லி முன்னாள் முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்த பின், பஞ்சாப் மாநிலத்திலேயே அடிக்கடி முகாமிட்டு வருகிறது. தற்போது அங்கு நடக்கும் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் செஷாத் பூனாவாலா, டில்லி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: டில்லியில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் தோல்வியடைந்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள், அண்டை மாநிலமான பஞ்சாபில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு பல்வேறு வாரியங்கள் மற்றும் கமிஷன்களில் டில்லி ஆம் ஆத்மி தலைவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. டில்லியில் மக்களின் வரி-ப்பணத்தில் 'ஷீஷ் மஹால்' எனப்படும் அரண்மனை போன்ற ஆடம்பர வசதிகளுடன் கூடிய பங்களாவை உருவாக்கி அதில் வசித்த கெஜ்ரிவாலை டில்லி மக்கள் வீட்டுக்கு அனுப்பினர். ஆனாலும், அந்த ஆடம்பர மனநிலையில் இருந்து கெஜ்ரிவால் இன்னும் மாறவில்லை. அதனால் தான், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தன் கட்சியின் தலைவருக்கு ஏழு நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஆடம்பர பங்களாவை ஒதுக்கியுள்ளார். பஞ்சாப் மக்களின் வரிப்பணத்தில், கெஜ்ரிவால் ஆடம்பர பங்களாவில் வசிக்கிறார். ஏனென்றால், கெஜ்ரிவால் பஞ்சாப் மாநிலத்தில் சூப்பர் முதல்வர். பஞ்சாபை ஆளும் ஆம் ஆத்மி கட்சி, மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பெண்களுக்கு நிதியுதவி வழங்குவதாக அளித்த வாக்குறுதியை மறந்தே விட்டனர். ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலின் வி.வி.ஐ.பி., பாதுகாப்புக்காக 100 கார்கள் கொண்ட கான்வாய், ஆடம்பர பங்களா வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.