பெங்களூரு: கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கமான கே.எம்.எப்., நந்தினி பிராண்ட் ரெடிமேட் இட்லி, தோசை மாவு வகைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. பால் விற்பனையில் சாதனை படைத்துள்ளதை அடுத்து, இந்த புதிய தொழிலில் களமிறங்க முடிவு செய்துள்ளது.கர்நாடகாவின் பெருமைக்குரிய அடையாளமாக கே.எம்.எப்., கருதப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன், கே.எம்.எப்.,பில், பால் உற்பத்தி 70 முதல் 75 லட்சம் லிட்டராக இருந்தது. பா.ஜ., அரசில், எடியூரப்பா முதல்வராக இருந்த போது, பால் உற்பத்தியாளர்களுக்கு, லிட்டருக்கு இரண்டு ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார். அதன்பின் பால் உற்பத்தி, கிடுகிடுவென அதிகரித்து 80 லட்சம் லிட்டரை எட்டியது. 'க்ஷிர பாக்யா'
இவ்வளவு பாலையும் விற்பனை செய்ய முடியாமல் கே.எம்.எப்., அதிகாரிகள் திணறினர். இதற்கு தீர்வு காணும் நோக்கில், அன்றைய சித்தராமையா அரசு, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு, பால் வழங்கும், 'க்ஷிர பாக்யா' திட்டத்தை செயல்படுத்தியது. பள்ளிகளுக்கு கே.எம்.எப்., பால் பவுடர் சப்ளை செய்கிறது. தற்போது பால் உற்பத்தி 95 லட்சம் லிட்டரை எட்டியுள்ளது. வரும் நாட்களில் இந்த அளவு ஒரு கோடி லிட்டரை எட்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.கர்நாடகாவில், 'நந்தினி' பிராண்ட் பெயரில், தயிர், மோர், வெண்ணெய், நெய், பால்கோவா, மைசூரு பாக், ஐஸ்கிரீம், சாக்லேட் உட்பட பல்வேறு தின்பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. நந்தினி உற்பத்திகளுக்கு, வெளி மாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. பல வெளிநாடுகளில் நந்தினி பார்லர்கள் திறக்கப்பட்டுள்ளன.தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடும் நோக்கில், கே.எம்.எப்., புதுப்புது உற்பத்திகளை அறிமுகம் செய்வதில், ஆர்வம் காண்பிக்கிறது. 'ரெடி டு குக்'
பெங்களூரு உட்பட கர்நாடகா முழுதும் ரெடிமெட் இட்லி, தோசை மாவுக்கு அதிக தேவை உள்ளது. ஐடி, எம்.டி.ஆர்., என பல தனியார் நிறுவனங்கள், இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளை விற்கின்றன. இதற்கு மார்க்கெட்டில், அமோக வரவேற்பு உள்ளது.பெரும்பாலான வீடுகளில், அன்றாட தேவைக்கு இந்த மாவை பயன்படுத்துகின்றனர். தற்போது தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட, கே.எம்.எப்., முடிவு செய்துள்ளது. விரைவில் நந்தினி பிராண்ட் இட்லி, தோசை மாவு விற்பனையில் களமிறங்க முடிவு செய்துள்ளது.இது குறித்து, கே.எம்.எப்., நிர்வாக இயக்குனர் ஜெகதீஷ் கூறியதாவது:மாநிலத்தில் ரெடி டு குக் இட்லி, தோசை மாவுக்கு அதிக தேவை உள்ளது. தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட, கே.எம்.எப்., தயாராகி வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள், நந்தினி பிராண்ட் இட்லி, தோசை மாவு விற்பனைக்கு வரும். அதிக மக்கள் தொகை உள்ள பெங்களூரில், எளிதில் சிற்றுண்டி தயாரிக்க மக்கள் வழி தேடுகின்றனர். குறிப்பாக மென் பொறியாளர்கள் ரெடி டு குக் உற்பத்திகளை நாடுகின்றனர். இவர்களின் வசதிக்காக, இட்லி, தோசை மாவு அறிமுகம் செய்கிறோம்.ஏற்கனவே மார்க்கெட்டில் விற்கப்படும், இட்லி, தோசை மாவை விட, நந்தினி பிராண்ட் மாவு மாறுபட்ட சுவையில் இருக்கும். உயர் தரமானதாக இருக்கும். டெண்டர்
இந்த மாவில், பாலேடு பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட புரோட்டீன் பொடி சேர்க்கப்படும். எனவே மாவு சுவையோடும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.மாவு தயாரித்து, சப்ளை செய்வது குறித்து கே.எம்.எப்., சமீபத்தில் டெண்டர் அழைத்தது. இதில் ஒரு நிறுவனம் மட்டுமே பங்கேற்றது. எனவே மற்றொரு முறை டெண்டர் அழைத்துள்ளோம். டெண்டர் பெறும் நிறுவனம், பெங்களூரில் இருக்க வேண்டும். எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.இட்லி, தோசை மாவு 450 கிராம், 900 கிராம் பாக்கெட்டுகளில், மார்க்கெட்டுக்கு வரும். ஆண்டுதோறும் 1.09 லட்சம் கிலோ மாவு தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். விலை இன்னும் முடிவு செய்யவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.