| ADDED : அக் 27, 2024 01:02 AM
புதுடில்லி: “வழக்கறிஞர்கள் தங்களிடம் பணிபுரியும் ஜூனியர் வழக்கறிஞர்களுக்கு முறையான சம்பளம் வழங்க வேண்டும்,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக, 2022 நவ., 8ம் தேதி பொறுப்பேற்ற டி.ஒய்.சந்திரசூட், 65, அடுத்த மாதம் 10ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அகில இந்திய வானொலிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:வழக்கறிஞர் தொழில் கடினமானது. இந்த தொழிலில் ஆரம்ப ஆண்டுகளில் போடப்படும் அடித்தளம் தான், இளம் வழக்கறிஞர்களை அவர்களின் வாழ்க்கை முழுதும் நல்ல நிலையில் வைத்திருக்கும். ஒரு தொழிலில் எப்போதும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும்.ஆரம்பத்தில், வழக்கறிஞர் தொழிலில் உங்கள் முதல் மாத வருவாய் அதிகமாக இருக்காது. எனவே, கடினமாக உழைப்பதும், நேர்மையாக இருப்பதும் முக்கியம்.வழக்கறிஞர் பணியை முதன் முறையாக துவங்கும் ஒருவரை ஊக்கப்படுத்த வேண்டும். மூத்த வழக்கறிஞர்கள் தங்களிடம் பணியில் சேரும் ஜூனியர் வழக்கறிஞர்களுக்கு முறையான சம்பளம் வழங்க கற்றுக் கொள்ள வேண்டும்.அகில இந்திய வானொலியுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. என் அம்மா, பாரம்பரிய இசைக்கலைஞர். நான், நான்காம் வகுப்பு படிக்கும் போது, மும்பையில் உள்ள அகில இந்திய வானொலி மையத்தின் ஸ்டூடியோவிற்கு அம்மா அடிக்கடி அழைத்துச் செல்வார். கடந்த 1975ல் டில்லிக்கு சென்றபின், அங்குள்ள வானொலி நிலையத்துக்கு நேர்காணலுக்கு சென்று ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.