| ADDED : மார் 05, 2024 07:03 AM
உத்தரகன்னடா: “பெங்களூரின், ராமேஸ்வரம் கபேவில் நடந்த குண்டுவெடிப்பு, முன்கூட்டியே திட்டமிட்ட சதி,” என, ஸ்ரீராம சேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் குற்றஞ்சாட்டினார்.உத்தரகன்னடாவில், நேற்று அவர் கூறியதாவது:ராமேஸ்வரம் கபேவில் நடந்த குண்டுவெடிப்பு, திட்டமிட்ட சதியாகும். இரண்டு தேசியக் கட்சிகளும், வாயை மூடிக்கொண்டு மவுனமாக அமர்ந்திருக்க வேண்டும். அந்தந்த கட்சிகளின் ஆட்சிக் காலத்தில், என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். குண்டுவெடிப்புக்கு இந்த இரண்டு கட்சியினருமே காரணம். அரசியல் லாபத்துக்காக எதையோ பேசுகின்றனர்.அரசியல் கட்சிகளின் பேச்சு, விசாரணை பாதையை திசை திருப்பும். பா.ஜ., ஆட்சியிலும் குண்டுவெடிப்பு நடந்தது. காங்கிரஸ் அரசிலும் நடந்தது. அரசியல் கட்சிகளின் அலட்சியமே, அவ்வப்போது குண்டுவெடிப்பு நடக்கக் காரணமாகின்றன. விசாரணை நடத்தவிடாமல், போலீசாரின் கைகளை, அரசு கட்டிப் போட்டுள்ளது. போலீசாரை கட்டிப் போடாதீர்கள்.பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடுவோர், நம் நாட்டை பொறுத்தவரை புற்றுநோய் போன்றவர்கள். முதலில் காங்., - எம்.பி., நாசிர் உசேன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்கலுக்கு, பாகிஸ்தானுடன் தொடர்புள்ளது என, ஜெகன்னாத் ஷெட்டி ஆணையம் அறிக்கை அளித்தது. அறிக்கையை அன்றைய பா.ஜ., அரசு ஏற்கவில்லை. பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.