புதுடில்லி: ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டம் குறித்து, அரசியல் நிபுணர்களும், பத்திரிகையாளர்களும், சட்ட நிபுணர்களும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 'போராட்டம் நடத்தியதன் மூலம், ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை, நாடு முழுவதும் உள்ள மக்களிடையே, ஹசாரே ஏற்படுத்தியுள்ளார். ஆனால், அவரது குழுவைச் சேர்ந்தவர்கள், போராட்டம் நடத்த கையாண்ட முறை, ஏற்புடையதல்ல' என, அவர்கள் கூறியுள்ளனர்.சட்டத் துறையைச் சேர்ந்த பி.பி.ராவ், பத்திரிகையாளர் சந்தன் மித்ரா மற்றும் வினோத் மேத்தா ஆகியோர் கூறுகையில், ''ஹசாரேயின் மூன்று முக்கிய கோரிக்கைகளை ஏற்பதாக மட்டுமே, பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜன் லோக்பாலில் வலியுறுத்தப்பட்ட மற்ற கோரிக்கைகள் குறித்து, அரசு தரப்பில் எதுவும் கூறப்படவில்லை. இருந்தாலும், கடந்த, 40 ஆண்டுகளாக மேற்கொள்ளப்படாத ஒரு நடவடிக்கை, ஹசாரேயின் போராட்டத்தால் நடந்திருக்கிறது,'' என்றனர்.சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மோகன் சிங் கூறுகையில், ''ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்த கையாண்டதற்கான முயற்சிகள், ஏற்புடையதல்ல,'' என்றார்.காங்., செய்தித் தொடர்பாளர் ரஷித் ஆல்வி கூறுகையில், ''கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக, ஹசாரேயும், அவரது ஆதரவாளர்களும் மேற்கொண்ட முயற்சிகள் சரியானது அல்ல. போராட்டம் நடத்துவது, மக்களின் அடிப்படை உரிமை தான். அதற்காக, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, அரசுக்கு மிரட்டல் விடுப்பதை ஏற்க முடியாது,'' என்றார்.ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் கூறுகையில், ''நியாயமான கோரிக்கைகளுக்காகவே, அன்னா ஹசாரே போராட்டம் நடத்தினார். இது, அமைதி வழியில் நடந்த போராட்டம் தான். பார்லிமென்ட் ஜனநாயகத்தை மீறிய செயலாக, இதை கருத முடியாது,'' என்றார்.