போபால் :பு திய குற்றவியல் சட்டத்தின்படி, ஒரு வழக்கின் சாட்சியங்கள், சேகரிக்கப்பட்ட தடயங்கள், குற்றம் நடந்த இடத்தின் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை, 'பென்டிரைவ்' வாயிலாக மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், மத்திய பிரதேச போலீசார் சொந்த பணத்தை ஆயிரக்கணக்கில் செலவு செய்ய நேர்வதாக புலம்புகின்றனர். புகைப்படம், 'வீடியோ'
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட ஐ.பி.சி., எனப்படும், இந்திய தண்டனை சட்டம், சி.ஆர்.பி.சி., எனப்படும், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டங்களில் தற்போதைய காலத்துக்கு ஏற்றது போல் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை செய்தது.இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு பி.என்.எஸ்., எனப்படும் பாரதிய நியாய சன்ஹிதா, பி.என்.எஸ்.எஸ்., எனப்படும், பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பி.எஸ்.ஏ., எனப்படும், பாரதிய சாக் ஷிய அதினியம் என பெயரிடப்பட்டுள்ளன. இந்த சட்ட திருத்தங்களுக்கு முன், வழக்குகள் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கும் போது, அவை காகித வடிவிலோ அல்லது 'சிடி' எனப்படும், 'காம்பாக்ட் டிஸ்க்' வடிவிலோ சமர்ப்பிக்கப்பட்டு வந்தன.புதிய சட்ட திருத்தத்தின்படி, பி.என்.எஸ்., வழக்கு தொடர்பான ஆவணங்கள், சாட்சியங்கள், தடயங்கள், குற்றம் நடந்த இடத்தின் புகைப்படம், 'வீடியோ' உள்ளிட்டவற்றை, 'பென்டிரைவ்' வடிவில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என, திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பென்டிரைவ் வாங்கவே ஆயிரக்கணக்கில் செலவாவதாகவும், அந்த தொகையை, போலீசார் பெரும்பாலும் தங்கள் பாக்கெட்டில் இருந்து செலவு செய்ய நேர்வதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சமாளிக்க முடியவில்லை
இதுகுறித்து எஸ்.ஐ., பிரேம் நாராயண் கூறுகையில், “ஒரு வழக்கிற்கு குறைந்தபட்சம் மூன்று பென்டிரைவ்கள் தேவைப்படுகின்றன. ஒரு பென்டிரைவ், 300 ரூபாய் வரை ஆகிறது. நீதிமன்றத்திற்கு ஒரு பிரதி, போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு பிரதி தேவைப்படுகிறது. இந்த செலவை எங்களால் சமாளிக்க முடியவில்லை,” என்றார்.
மாதம் ரூ.25 லட்சம்!
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 2024 ஜூலை 1 முதல் செப்., 3 வரையிலான மூன்று மாதங்களில் புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ், 5,56,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சராசரியாக ஒரு நாளில், 7,400 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதன்படி கணக்கிட்டால், மத்திய பிரதேசத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள், பென்டிரைவ்களுக்காக மாதம் 25 லட்சம் ரூபாய் செலவு செய்ய நேரிடும் என, கூறப்படுகிறது.