UPDATED : நவ 12, 2025 03:28 AM | ADDED : நவ 12, 2025 03:26 AM
புதுடில்லி: நீர் சேமிப்பு மற்றும் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் தேசிய தண்ணீர் விருதுக்கு முதல் மாநிலமாக மஹாராஷ்டிரா தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த, 2018ல் தேசிய தண்ணீர் விருது அறிமுகப்படுத்தப்பட்டது. நாடு முழுதும் நீர் சேமிப்பு மற்றும் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள், மாவட்டங்கள், கிராமங்கள், கல்வி நிலையங்கள் என, 10 பிரிவுகளின் கீழ் ஆண்டுதோறும் தேசிய தண்ணீர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு விருதுகளை அத்துறையின் அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் நேற்று அறிவித்தார். அதில் நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலங்கள் பிரிவில் மஹாராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ளது. இரண்டு மற்றும், மூன்றாம் இடங்களை குஜராத் மற்றும் ஹரியானா மாநிலங்கள் பெற்று உள்ளன. இதே போல் 'ஜல் சஞ்சய் ஜன பாகிதாரி' என்ற பெயரில் மழைநீர் சேகரிப்பு முயற்சிகளை மக்கள் பங்கேற்புடன் மேற்கொள்ளும் சிறப்பு திட்டத்தை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் கடந்த ஆண்டு துவங்கியது. இதில் தெலுங்கானா மாநிலம் மொத்தம், 5.2 லட்சம் நீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி நாட்டிலேயே முதல் இடம் பிடித்துள்ளது. சத்தீஸ்கர், 4.05 லட்சம் மற்றும் ராஜஸ்தான், 3.64 லட்சம் நீர் சேமிப்பு கட்டமைப்புகளுடன் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளன. இந்த மாநிலங்களும் தேசிய தண்ணீர் விருது விழாவில் கவுரவிக்கப்பட உள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாவட்டங்களும் தேர்வாகி உள்ளன. அதன் விபரம் தற்போது வெளியிடப் படவில்லை. இந்த விருது வழங்கும் விழா ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் நவ., 18ல் டில்லியில் நடக்க உள்ளது.