அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு
புதுடில்லி:பிளாஸ்டிக் பையில் அழுகிய நிலையில் ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டது. கிழக்கு டில்லியின் காஜிபூர் முல்லா காலனிக்கு எதிரில், ஹிண்டன் கால்வாய் அருகே, பிரமாண்ட பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட சந்தேகத்துக்கிடமான பொருள் கிடப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் நேற்று முன் தினம் மாலை, போலீசுக்கு தகவல் கிடைத்தது. காஜிபூர் போலீசார் விரைந்து சென்றனர். பழுப்பு நிற டேப்பால் இறுக்கமாக சீல் வைக்கப்பட்டிருந்த ஒரு பிளாஸ்டிக் பை கிடந்தது. அதைப் பிரித்த அழுகிய நிலையில் ஆண்ட் உடல் இருந்தது. அதை, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அந்தப் பகுதி முழுதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. குற்றவியல் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அந்தப் பகுதி முழுதும் அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தனர். அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் காணாமல் போனவர்கள் பற்றிய பதிவுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் மூன்று மாதங்களுக்கு முன் இருந்து பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.