மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயங்கரவாதிகள்: நொய்டாவில் ஒருவர் கைது
மும்பை: மும்பையில் மனித வெடிகுண்டுகள் வாயிலாக, 400 கிலோ ஆர்.டி.எக்ஸ்., வெடிமருந்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்போவதாக, பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்தது தொடர்பாக நொய்டாவில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.மஹாராஷ்டிராவின் மும்பையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில், 34 வாகனங்களில் வரும் மனித வெடிகுண்டுகள் வாயிலாக, 400 கிலோ ஆர்.டி.எக்ஸ்., வெடிமருந்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்போவதாக, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நேற்று மிரட்டல் விடுத்தனர்.இதையடுத்து, மும்பை நகர் முழுதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்; முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நகரம் முழுதும் பாதுகாப்பு பணியில், 21,000க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், மும்பை போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கான, 'வாட்ஸாப்' எண்ணுக்கு வந்த மிரட்டல் செய்தி தொடர்பாக, நொய்டாவில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 51 வயதான அஸ்வினி குமார் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் பீகாரின் பட்லிபுத்ராவைச் சேர்ந்தவர். கடந்த ஐந்து ஆண்டுகளாக நொய்டாவில் வசித்து வந்த அவர், ஜோதிடராக இருந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். அந்த நபரின் தொலைபேசி மற்றும் சிம் கார்டை போலீசார் பறிமுதல் செய்து, நொய்டாவிலிருந்து மும்பைக்கு அழைத்து வந்து விசாரிக்க இருக்கின்றனர். மும்பை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.