உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா நியமனம்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா நியமனம்

புதுடில்லி; சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அங்கிருந்த தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட நான்கு தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அங்கு தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். வடகிழக்கு மாநிலமான திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங், தெலுங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராமச்சந்திர ராவ், திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களை தவிர, ஐந்து மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மத்திய பிரதேச மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் சச்தேவா, கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக விபு பக்ரூ, வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக அசுதோஷ் குமார். பீஹாரின் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக விபுல் மனுபாய் பஞ்சோலி, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தர்லோக் சிங் சவுகான் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை