மேலும் செய்திகள்
ராஜினாமா மிரட்டல் முதல்வர் சித்து அச்சம்
05-Feb-2025
இம்பால்; கூகி - மெய்டி சமூகத்தினர் இடையே வன்முறை ஏற்பட்ட போதும், இரண்டு ஆண்டுகளாக பதவி விலகாமல் இருந்த மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங், நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்படுவதை தவிர்க்கவும், உட்கட்சி நெருக்கடியை தவிர்க்கவும் தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கூகி மற்றும் மெய்டி சமூகத்தினர் இடையே, 2023 மே 3ம் தேதி மோதல் ஏற்பட்டது.இது, வன்முறையாக மாறி, இரண்டு ஆண்டுகளில், 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெரிய அளவில் பதற்றம் தணிக்கப்பட்டாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.இந்த வன்முறைகளுக்கு பொறுப்பேற்று, பா.ஜ.,வைச் சேர்ந்த பைரேன் சிங் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அவற்றை பா.ஜ., நிராகரித்து வந்தது.இந்நிலையில், ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை, ஆறு எம்.எல்.ஏ.,க்களை வைத்துள்ள கான்ரான்ட் சங்மாவின், தேசியவாத மக்கள் கட்சி சமீபத்தில் விலக்கிக் கொண்டது.இருப்பினும், சட்டசபையில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, 49 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளது.இதில், பா.ஜ.,வுக்கு மட்டும் 38 பேர் உள்ளனர். நாகா மக்கள் முன்னணியின் ஆறு, ஐக்கிய ஜனதா தளத்தின் இரண்டு பேர் ஆதரவு உள்ளது. இதைத் தவிர மூன்று சுயேச்சைகளின் ஆதரவும் உள்ளது.பெரும்பான்மைக்கு, 31 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில், பா.ஜ.,வுக்கு தனிப்பட்ட முறையில் பெரும்பான்மை உள்ளது.அதே நேரத்தில், முதல்வரை மாற்ற வேண்டும் என, பா.ஜ.,வைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏ.,க்கள், பைரேன் சிங்குக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளனர்.இதைத்தவிர, ஆறுக்கும் மேற்பட்டோர் அதிருப்தியாளர்கள் தரப்புக்கு தாவத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், முதல்வருக்கும், சபாநாயகருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த சூழ்நிலையில், பைரேன் சிங் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்ய, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்டால், முதல்வருக்கு எதிராக உள்ள பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது.இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பைரேன் சிங். கவர்னர் அஜய் பல்லாவை நேற்று சந்தித்து, தன் ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார்.முன்னதாக டில்லி சென்ற பைரேன் சிங், கட்சித் தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.டில்லியில், 27 ஆண்டுகளுக்கு பின், பா.ஜ., ஆட்சி அமைய உள்ள நிலையில், மணிப்பூர் விவகாரத்தில் கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், பதவி விலகுமாறு பைரேன் சிங்குக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
05-Feb-2025