|  ADDED : ஜன 08, 2025 04:57 AM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு டில்லி ராஜ்காட் அடுத்துள்ள ராஷ்ட்ரீய ஸ்மிருதி வளாகத்தில் நினைவிடம் அமைக்க மத்திய அரசு இடம் ஒதுக்கியுள்ளது.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி, கடந்த, 2020ல் காலமானார். இவர் நாட்டின் 13வது ஜனாதிபதியாக 2012 -- 2017 வரை பதவி வகித்தார். அதற்கு முன் 2009 முதல் 2012 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்தார். இவருக்கு 2019ல் மத்திய பா.ஜ., அரசு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி கவுரவித்தது. இந்நிலையில், டில்லியில் ராஜ்காட் அருகே உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிருதி எனப்படும் தேசிய நினைவிட வளாகத்தில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் கட்ட மத்திய அரசு இடம் ஒதுக்கியுள்ளது. ராஜ்காட்டில் மஹாத்மா காந்தி, நேரு, இந்திரா, ராஜிவ், சரண் சிங் ஆகியோரின் நினைவிடம் உள்ளன. இதற்கு அருகே, விஜய் காட் என்ற பெயரில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடம் உள்ளது. அதன் அருகே ராஷ்ட்ரீய ஸ்மிருதி வளாகம் என்ற பெயரில் முன்னாள் பிரதமர்களான ஐ.கே.குஜ்ரால், நரசிம்ம ராவ் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் வெங்கட்ராமன், நாராயணன் ஆகியோரின் நினைவிடங்களை மத்திய அரசு அமைத்துள்ளது.அந்த வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க உள்ளனர். இந்த அறிவிப்புக்கு பிரணாபின் மகள் சர்மிஸ்தா முகர்ஜி, பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.