மேலும் ஓர் வழித்தடத்தில் மொஹல்லா பஸ் சோதனை
புதுடில்லி:மேலும் ஒரு வழித்தடத்தில் மொஹல்லா பஸ் சோதனை ஓட்டம் நேற்று துவங்கியது.வசந்த் விஹார் வட்ட வழித்தடத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.தலைநகர் டில்லியில், பிரதான் என்கிளேவ் புஷ்தா - மஜ்லிஸ் பார்க் மெட்ரோ ரயில் நிலையம், அக் ஷர்தாம் மெட்ரோ ரயில் நிலையம் - மயூர் விஹார் பேப்பர் மார்க்கெட், கைலாஷ் காலனி மெட்ரோ ரயில் நிலையம் - கீதாஞ்சலி காலனி மற்றும் லோக் கல்யாண் மார்க் மெட்ரோ ரயில் நிலையம் - வசந்த் விஹார் ஆகிய நான்கு வழித்தடங்களில் ஏற்கனவே மொஹல்லா பஸ் சோதனை ஓட்டம் நடக்கிறது.இந்நிலையில், 5 வது வழித்தடத்தில் வசந்த் விஹாரில் மொஹல்லா பஸ் சோதனை ஓட்டத்தை, போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் மற்றும் ஆர்.கே.புரம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., பிரமிளா டோகாஸ் ஆகியோர் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தனர்.இந்த 5 வழித்தடம் முனீர்கா, வசந்த் குஞ்ச், ஜவஹர்லால் நேரு பல்கலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் 11 கி.மீ., தூரம் அமைந்துள்ளது. இந்த சோதனை ஓட்டத்தில் தற்போது இரண்டு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என அமைச்சர் கெலாட் கூறியுள்ளார்.ஒன்பது மீட்டர் நீளம் 12 மீட்டர் அகலம் கொண்ட மொஹல்லா பஸ் மின்சாரத்தில் இயங்குகிறது. குறுகிய தெருக்களிலும் எளிதாக செல்லும். அடுத்த ஆண்டுக்குள் மாநகர் முழுதும் 2,180 மொஹல்லா பஸ்களை இயக்க டில்லி அரசு திட்டமிட்டுள்ளது.இந்த பஸ்சில் 23 பயணியர் உட்கார்ந்தும் 13 பேர் நின்றும் பயணம் செய்யலாம். அதில் 6 இருக்கைகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பஸ்சின் பேட்டரியை 45 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 200 கி.மீ., இயங்கும்.மொஹல்லா பஸ்சை எளிதாக அடையாளம் காண பச்சை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த பஸ்சில் 10, 15, 20, மற்றும் 25 என தூரத்தைப் பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பிங்க் பாஸ் வைத்துள்ள பெண்கள் இந்த பஸ்சில் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.