உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பறிமுதல் செய்ததை விட கூடுதல் கஞ்சா ஒப்படைப்பு: போலீஸ் தவறால் கடத்தலில் சிக்கிய 4 பேர் விடுதலை

பறிமுதல் செய்ததை விட கூடுதல் கஞ்சா ஒப்படைப்பு: போலீஸ் தவறால் கடத்தலில் சிக்கிய 4 பேர் விடுதலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பறிமுதல் செய்ததை விட, கூடுதலாக 6 கிலோ 580 கிராம் கஞ்சாவை, நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்ததால், 230 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரை விடுதலை செய்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஆந்திராவில் இருந்து, 'ஸ்கார்பியோ' காரில், சென்னைக்கு கஞ்சா கடத்தி வருவதாக, 2022 மார்ச் 10ல், போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, கவரைப்பேட்டை- - சத்தியவேடு சந்திப்பில், கவரைப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை

அவ்வழியாக வந்த தமிழக பதிவெண் கொண்ட, 'ஸ்கார்பியோ' காரை மடக்கி சோதனையிட்டனர். அதில், பாலிதீன் பைகளில் மறைத்து வைத்திருந்த, 230 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.காரில் இருந்த மதுரை மாவட்டம் கம்மாளப்பட்டியை சேர்ந்த அய்யர், 55, அல்லி நகரத்தைச் சேர்ந்த ஜெயகுமார், 23, எல்லீஸ் நகரை சேர்ந்த சவுந்தரபாண்டி, 22, திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த எட்வின்ராஜ், 24, ஆகியோரை கைது செய்தனர்.வாகனத்தில் இருந்த சிறுவன் ஒருவனை, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிய போலீசார், மற்ற நான்கு பேர் மீதும் போதைப்பொருள் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கு, சென்னை முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது.குற்றம் சாட்டப்பட்ட சவுந்தரபாண்டி சார்பில், வழக்கறிஞர்கள் டி.சீனிவாசன், ஜி.எஸ்.மகேஷ் ஆஜராகி, 'கைதான நபர்கள் ஆந்திராவில் இருந்து தான் வந்தனர் என்பதை போலீசார் நிரூபிக்கவில்லை.பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை, நீதிமன்றத்தில் காலதாமதமாக ஒப்படைத்து உள்ளனர். பறிமுதல் செய்த கஞ்சாவுக்கும், நீதிமன்றத்தில் ஒப்படைத்த கஞ்சாவுக்கும் வித்தியாசம் உள்ளது' என்று வாதாடினர்.இதையடுத்து, நீதிபதி ராஜலட்சுமி பிறப்பித்த உத்தரவு:வழக்கில் சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. கவரைப்பேட்டை- - சத்தியவேடு சந்திப்பில் சோதனை நடத்தியதாக கூறிய போலீசார், கவரைப்பேட்டை- - மாடம்பாக்கம் சந்திப்பில், கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளனர்.இதை பார்க்கும் போது, சம்பவ இடத்துக்கு போலீசார் செல்லவில்லை என்பது தெரிகிறது.மிக அதிக எடையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. எனவே, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும், அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இந்த வழக்கில் சட்டப்பிரிவுகளின் படி, பொது சாட்சியம் முக்கியமானது. ஆனால், பொது சாட்சிகள் எவரும் சாட்சியம் அளிக்கவில்லை.கஞ்சா பறிமுதல் செய்ததை, போலீஸ் தரப்பு நிரூபித்துள்ளது. ஆனால், போலீசார் மட்டுமே சாட்சியம் அளித்துள்ளனர்.சம்பவ இடத்துக்கு செல்லாமல், ஒரு கதையை உருவாக்கி, வழக்கில் நான்கு பேரையும் தவறாக சேர்த்துள்ளனர். இதை குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

நிரூபிக்கவில்லை

பறிமுதல் தொடர்பான மகஜரில், 230 கிலோ கஞ்சா என்று பதிவு செய்துள்ள போலீசார், நீதிமன்றத்தில், 236 கிலோ 580 கிராம் கஞ்சாவை ஒப்படைத்துள்ளனர். பறிமுதல் செய்த கார் யாருக்கு சொந்தமானது என்பதையும் நிரூபிக்கவில்லை. நீதிபதி முன், கஞ்சா மாதிரிகள் எடுக்கப்படவில்லை.எனவே, தடய அறிவியல் பரிசோதனை அறிக்கை, ஒரு சாதாரண காகிதம் தான். இந்த வழக்கில், போலீசார் குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறி விட்டனர் என்பதால், நான்கு பேரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

premprakash
ஜூலை 13, 2025 22:52

படு பாவீங்க... இப்படி ஒரு நீதி மன்றம் இருந்தால் நம் நாடு எப்படி உருப்படும்...


Ramesh Sargam
ஜூலை 13, 2025 13:18

தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் மிகவும் கேவலமாக இருக்கிறது. முதல்வர் வெட்கித்தலைகுனியவேண்டும்.


Naga Subramanian
ஜூலை 13, 2025 07:12

நல்லவேளை திருபுவனம் அஜித்தை கோவில் பின்புறம் சென்று விசாரித்ததை போன்றில்லாமல், வேறொரு வழியைப் பின்பற்றியதால், அந்த நாலு பேரின் ஆயுட்காலம் நீதிமன்றத்தால் உறுதியளிக்கப்பட்டுள்ளது. நீதியரசரே போற்றி போற்றி முதலில், தமிழக காவல் நிலையங்களில் அனைத்திலும், எவ்வளவு போதை வஸ்த்துக்கள் கையகப்படுத்தி இருப்பில் வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து பறிமுதல் செய்ய வேண்டும்.


Kasimani Baskaran
ஜூலை 13, 2025 06:16

காவல்துறையிடம் 6 கிலோ எக்ஸ்ட்ரா கஞ்சா ஸ்டாக் இருந்திருக்கிறது. ஆகவே காவல்துறை கஞ்சா கடத்தியது என்று வழக்கை திருப்பியிருக்க வேண்டும். பூவுடன் சேர்ந்த நாரும் மனம் பெரும் என்பது போல தீம்க்காவுடன் சேர்ந்த காவல்துறை என்ன வேண்டுமானாலும் செய்யும்.


Padmasridharan
ஜூலை 13, 2025 05:32

"இந்த வழக்கில், போலீசார் குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறி விட்டனர்" இந்த வழக்கு மட்டுமல்ல சாமியோவ், எல்லாத்துலயுமே மொதல்ல பணம் எவ்வளவு தேறுமென்றுதான் பார்க்கிறார்கள். சில சட்டங்களை தெரிந்துகொண்டு மக்களை பயமுறுத்தி பணம்/பொருள் பறிக்கின்றனர். இதனால் குற்றங்களை மறைப்பதும் புதிய குற்றவாளிகளை உருவாக்குவதும் நடக்கின்றது இந்த மாதிரி அதிகாரப் பிச்சைக்காரர்களால்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை