30 ஆண்டுகளுக்கு பின் கொலை குற்றவாளி கைது
மால்வியா நகர்: டில்லி, ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி, மத்திய பிரதேசத்தில் தலைமறைவாக பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் பதுங்கியிருந்த கிஷோர், 50, அங்கு ஒரு கல்வி மையத்தில் காவலாளியாக பணியாற்றி வருவதை போலீசார் உறுதி செய்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரைக் கைது செய்தனர்.காசியாபாத்தைச் சேர்ந்த கிஷோர், போலீஸ் கைதில் இருந்து தப்பிக்க அடிக்கடி இடம் மாற்றி வந்துள்ளார். பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.கடந்த 1995ம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடந்த ஒரு கொலை, மால்வியா நகரில் நடந்த கொள்ளை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கடுமையான குற்றங்கள் புரிந்ததாக அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. 30 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தது தெரிய வந்தது.தன் சகோதரரின் கொலைக்குப் பழிவாங்குவதற்காக 1995ம் ஆண்டு முதல் கொலை செய்த பிறகு தான் தொடர் குற்றங்களில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் கிஷோர் தெரிவித்தார்.