உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று பிறக்கும் சிசுக்களுக்கு பரிசு

தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று பிறக்கும் சிசுக்களுக்கு பரிசு

பெங்களூரு: தேசிய பெண் குழந்தைகள் தினத்தை, இன்று சிறப்பாக கொண்டாட சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.இது தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நேற்று பெங்களூரில் அளித்த பேட்டி:ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினமாகும். நாளை (இன்று) இந்த தினத்தை சிறப்பாக கொண்டாட, சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பெண் சிசுக்கள் கருவில் கொல்லப்படுவதை தடுத்து, பெண்களின் சதவீதத்தை அதிகரிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இன்று அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு, சிறப்பு பரிசு அளிக்கப்படும். நாளை பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு, 1,000 ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கும்படி, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில், பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாட வேண்டும். மருத்துவமனைகளை பிங் நிற லைட்டிங் அலங்காரம் செய்ய வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, அரசு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளது. 'சுசி, ஜனனி சுரக்ஷா' என, பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பெண் சிசுக்களை கருவில் அழிப்பவர்கள் மீது, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். சமுதாயத்தில் பெண் பிள்ளைகள் எதிர்கொள்ளும் அனைத்து ஏற்றத்தாழ்வுகளை போக்கும் வகையில், தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைக்கும் கூட பலரும், பெண் குழந்தைகளை விட, ஆண் குழந்தைகள் பெற வேண்டும் என, விரும்புகின்றனர். இது சரியல்ல. பெண்களை கவுரவத்துடன் பார்க்க வேண்டும். கர்ப்பத்தில் இருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தை என, கண்டறிவது சரியானது அல்ல. பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை