உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக என்.டி.ஏ.,வுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி!: மோசடி நபர்களை கண்டுபிடிக்க முடியாவிட்டால் மறு தேர்வு

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக என்.டி.ஏ.,வுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி!: மோசடி நபர்களை கண்டுபிடிக்க முடியாவிட்டால் மறு தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது உண்மை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இது தொடர்பாக பல்வேறு தகவல்களை கேட்டுள்ள அமர்வு, முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க முடியாவிட்டால், ஏற்கனவே நடந்த தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவித்தது.நாடு முழுதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, மே 5ம் தேதி நடந்தது. இதன் முடிவு, ஜூன் 4ம் தேதி வெளியானது.இந்த தேர்வில், இதுவரை இல்லாத அளவுக்கு, 67 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். அதிலும், ஒரு குறிப்பிட்ட தேர்வு மையத்தைச் சேர்ந்த ஆறு பேர் முதலிடத்தைப் பிடித்திருந்தனர்.இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிந்தது, ஆள் மாறாட்டம் நடந்தது என, பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

நடவடிக்கை

இந்த விவகாரம் தொடர்பான, 30க்கும் மேற்பட்ட வழக்குகளை தொகுத்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.இந்த வழக்குகள், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்துள்ளது உறுதியாகி உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசும், தேர்வை நடத்திய என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமையும் என்ன நடவடிக்கை எடுத்துள்ளன? இந்தத் தேர்வு, லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை தொடர்பானது.நடந்தவற்றில் தங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டாம். தேர்வை அரசு ரத்து செய்யாத நிலையில், மோசடிகளால் பலனடைந்தவர்களை அடையாளம் காண்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?நேர்மையாக தேர்வு எழுதியவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை ஏற்க முடியுமா?இந்த விவகாரத்தில், நாட்டின் எந்தெந்த பகுதிகளில் வினாத்தாள் கசிவு மோசடி நடந்தது என்ற தகவல் வேண்டும். அந்த கேள்வித்தாள் கசிவதற்கு அவர்கள் கையாண்ட வழிகள் என்ன என்பது தெரிய வேண்டும்.எத்தனை பேர் இந்த மோசடியில் ஈடுபட்டு பலனடைந்துள்ளனர் என்பதை கண்டறிய வேண்டும். இவ்வாறு கண்டுபிடிக்க முடியாவிட்டால், மறு தேர்வு நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை.தேர்வு நடப்பதற்கு எத்தனை மணி நேரத்துக்கு முன் வினாத்தாள் கசிந்தது; எந்தெந்த வழிகளில் கசிந்தது என்ற தகவலும் வேண்டும். சமூக வலைதளங்கள் வழியாக கசிந்திருந்தால், அது பலருக்கும் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது. அந்த நிலையில், ஏற்கனவே நடந்த தேர்வை ரத்து செய்து, மறு தேர்வு நடத்துவதை தவிர வேறு வழியில்லை.

வினாத்தாள் கசிவு

இந்த வினாத்தாள் கசிவு மோசடி திட்டமிட்டு நடந்ததா; அது இந்த தேர்வின் நம்பகத்தன்மையை பாதித்துள்ளதா என்பதை பார்க்க வேண்டும். நேர்மையாக தேர்வு எழுதிய மாணவர்களிடம் இருந்து மோசடியில் ஈடுபட்ட மாணவர்களை பிரித்து பார்க்க என்ன வழிமுறைகள் உள்ளன என்ற தகவல் வேண்டும். அவ்வாறு பிரிக்க முடியாது என்றால், மறு தேர்வை தவிர வேறு வழியில்லை. இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டவர்களை எப்படி அடையாளம் காண்பது என்பதை தேசிய தேர்வு முகமை விளக்க வேண்டும். இதற்கென ஏதாவது வழிமுறைகளை அது வைத்துள்ளதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.அதுபோல், எந்தெந்த பகுதிகளில், எந்தெந்த தேர்வு மையங்களில் மோசடி நடந்தது என்பதை அவர்களால் அடையாளம் காண முடியுமா என்பதையும் தெரிவிக்க வேண்டும். நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்துள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது. இதை மறுக்க முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக பல்துறை நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்.நீட் தேர்வில் நடந்துள்ள அனைத்து மோசடிகள் தொடர்பாகவும் விசாரிக்கும் சி.பி.ஐ., தன் விசாரணையின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த அனைத்து தகவல்களின் அடிப்படையில், இந்தத் தேர்வில் நம்பகத்தன்மை இழந்திருந்தால், மறு தேர்வு நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.இதைத் தொடர்ந்து, 11ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Sankaran Natarajan
ஜூலை 09, 2024 16:48

இல்லை. இந்த ஆண்டு தேர்வு முறை எளிதாக்கப்பட்டுள்ளதாக தேசியதேர்வு முகமை தெரிவித்துள்ளது


RAVIKUMAR
ஜூலை 09, 2024 16:33

ஆமாம் ஆமாம் ... அவ்ளோ பெரிய படகுக்கு கீழ ஜஸ்ட் 4 5 ஓட்டை இருந்தால் அது ஒன்னும் பெரிய விஷயம் ல்லை ..சகஜம்தான்


Ramamurthy N
ஜூலை 09, 2024 09:59

ஒரு மாணவனின் திறமை என்பது ஒவ்வொரு ஆண்டும் அவன் பெற்ற மதிப்பெண் மூலமே தெரியும். எனவே 10, 11, 12 ஆண்டு தேர்வு மதிப்பெண் மற்றும் ஆன்லைன் தேர்வு மதிப்பெண் சேர்த்து கணக்கில் எடுத்து கொண்டால் மட்டுமே மாணவனின் உண்மையான தகுதி தெரியும். மாணவன் கோச்சிங் சென்டர் செல்லாமலே மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கும். திறமையான மருத்துவர்களும் கிடைப்பார்கள்


R K Raman
ஜூலை 08, 2024 21:07

இந்த தேர்வை முழுவதும் ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும். சென்ட்ரல் ஸர்வர் ஒன்றில் மட்டுமே கேள்வித்தாள் அனுப்பி ஆன்லைனில் தேர்வு எழுத வைத்து உடனுக்குடன் மதிப்பெண் தெரிவித்து விட்டால் இவ்வாறு பிரச்சினை வராது. ஆனால் அத்தனை பேருக்கும் கம்ப்யூட்டர் மையம் கிடைப்பது கடினம்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 08, 2024 19:30

இதற்கு முழுக்க முழுக்க பாஜக அரசை மட்டும் பொறுப்பாக்க முடியுமா ???? திமுக அங்கம் வகித்த காங்கிரசின் யூ பி ஏ ஆட்சியில் நீட் தேர்வினை திமுக கேள்வியே கேட்காமல் ஆதரித்தது ...... முறைகேடுகளில் சம்பந்தம் இல்லாமலா இது நடந்தது ????


arasialvathy
ஜூலை 10, 2024 17:06

இதற்கு தொடர்பில்லாத உளறல்۔ தேவையில்லாமல் திமுக வை குறைபவர்


ஆரூர் ரங்
ஜூலை 08, 2024 19:06

பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் 99 மார்க் எடுத்துள்ளனர். ஆனா சிலர் முழு மார்க் எடுத்தது மட்டுமே விவாதிக்கப்படுவது ஏன்? எல்லோரும் 720 க்குக் கீழ் ஏதோ ஒரு மார்க்கைத்தானே எடுக்க முடியும்? 23 லட்சம் பேரை 720 ஆல் வகுத்துப் பாருங்கள்.


தாமரை மலர்கிறது
ஜூலை 08, 2024 19:00

அந்த காலத்திலிருந்தே வினாத்தாள் ஒருசில இடங்களில் கசிவது இயற்கை தான். ஒரு பெரிய மைதானத்தில் ஒரு சில இடங்களில் களை முளைக்கும் தான். அதற்காக மைதானத்தையே கொளுத்தவேண்டிய அவசியமில்லை. அதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.


ஆரூர் ரங்
ஜூலை 08, 2024 19:00

எத்தனை முறை தேர்வை மீண்டும் நடத்தினாலும் பெற்றோர்களிடையே நேர்மைத் தட்டுப்பாடு குறைபாடு இருக்கும் வரை முறைகேடுகள் தொடரும். தென்னகத்தில் விஞ்ஞான முறையில் தவறு செய்கிறார்கள்.அதனால் மாட்டிக் கொள்வது அபூர்வம். வடக்கே அவ்வளவு திறமை கிடையாது.


இராம தாசன்
ஜூலை 08, 2024 21:25

இதற்கு பெற்றோர், அரசியல் வியாதிகள் நடத்தும் கோச்சிங் சென்டெர்ஸ், மக்களின் பேராசை


Palanisamy Sekar
ஜூலை 08, 2024 18:28

நீதிபதிகள் சொன்ன வார்த்தையை இங்கே உள்ள திராவிட மாடல் ஆட்சியாளர்கள் சிந்திக்கணும். நீட் தேர்வின் புனித தன்மை ..எப்படிப்பட்ட அருமையான புனிதமான வரிகள்... சபாஷ்.. நீட் தேர்வை ரத்து செய்யணும் என்று துடிப்பவர்கள் நீட் தேர்வின் அருமையை உணராதவர்கள். மருத்துவ படிப்பை வியாபாரமாக்க துடிக்கின்ற பணப்பேய்கள் என்றுதான் சொல்லணும். எங்கேயோ ஒரு தப்பு நடந்துவிட்டது என்பதற்க்காக நீட் தேர்வின் புனிதம் பாதிக்கப்பட கூடாது


SRIRAMA ANU
ஜூலை 08, 2024 17:02

கடந்த 8 ஆண்டுகளில் மொத்தமாக 7 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்ற நிலையில், இந்த ஆண்டு 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிலும், ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதற்கெல்லாம் மேலாக 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் கூட, நீட் தேர்வில் 700-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருப்பது நீட் தேர்வு என்பது குளறுபடிகளின் உச்சமாக இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது


ஆரூர் ரங்
ஜூலை 08, 2024 18:56

தேர்வு சிலபஸ் பதினைந்து சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது தேர்வை எளிதாக்கி அதிக மார்க் வாங்க உதவியுள்ளது. இரண்டாவதாக அடுத்தடுத்த தலைமுறை மாணவர்கள் இன்னும் புத்திசாலிகள் என்பது. தமிழகத்திலும் ஒரே பள்ளி மாணவர்கள் முதல் இரண்டாம் ரேங்க் வாங்கிய வரலாறு உண்டு. ஒரே பள்ளியில் படித்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெற்றதும் நடந்தது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை