உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதுடில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதா?

புதுடில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதா?

புதுடில்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில், புதுடில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட உள்ளதாக செய்தி வெளியானதால், நேற்று அவரது வீட்டைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பரபரப்பு நிலவியது.

விசாரணை

புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பெரும் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, ஜூலை 2022ல் மதுபான கொள்கை வாபஸ் பெறப்பட்டது.இந்த புதிய மதுபான கொள்கை வாயிலாக குறிப்பிட்ட சில நிறுவனங்கள் பயனடைந்ததாகவும், அதற்காக பல கோடி ரூபாய் பணம் லஞ்சமாக கைமாறியுள்ளதாகவும் புகார் எழுந்தது. அதனடிப்படையில் சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்துகிறது.இந்த வழக்குகளில் டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங், விஜய் நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலையும் விசாரணைக்கு ஆஜராகும் படி அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் அனுப்பப்பட்ட நோட்டீசையும் கெஜ்ரிவால் புறக்கணித்தார்.

மிகப்பெரிய சொத்து

இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் நேற்று பரவியது. கெஜ்ரிவாலின் வீட்டின் முன், கட்சியினர் மற்றும் ஊடகத்தினர் திரண்டனர். இதையடுத்து அவரது வீட்டைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆனால் இரவு வரை அவர் கைது செய்யப்படவில்லை. இது குறித்து, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:இரண்டு ஆண்டுகளாக மதுபான கொள்கை ஊழல் வழக்கை அமலாக்கத் துறை விசாரிக்கிறது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், என்னிடம் விசாரிக்க வேண்டும் என்கின்றனர். மக்களிடம் எனக்கு உள்ள நற்பெயரை சீர்குலைக்கவும், லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்யவிடாமல் தடுக்கவும், கைது செய்ய முயற்சிக்கின்றனர். அதற்காக அமலாக்கத்துறையை மத்திய பா.ஜ., அரசு பயன்படுத்துகிறது. நேர்மை தான் என்னுடைய மிகப்பெரிய சொத்து. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Barakat Ali
ஜன 05, 2024 07:48

குப்பனோ சுப்பனோ இப்படி "இன்று போயி நாளை வா" என்று சட்டத்தை டபாய்க்க முடியுமா ???? வீடு புகுந்து இழுத்துச் செல்லப்படுவார்கள் .....


N.Purushothaman
ஜன 05, 2024 07:48

இவர் மூன்று முறை விசாரணைக்கு ஆஜராகவில்லை .....அதனால் நான்காவது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது அமலாக்கத்துறை ...அவ்வளவே ...கைது செய்யும் நோக்கம் எதுவும் இல்லை என்பதை அமலாக்கத்துறை அறிக்கையின் மூலம் தெளிவு படுத்தி உள்ளது ... இவர் பேசுவதெல்லாம் பொய் ...இவரை போலவே எட்டு முறை ஜார்கண்ட் முதல்வர் சோரன் ஆஜராகவில்லை ....அவரை என்ன கைதா செய்து விட்டார்கள் ?.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி