சபரிமலை பக்தர்கள் வசதிக்காக புதிய டிஜிட்டல் தளம் அறிமுகம்
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு, ‘சரண்’ என்ற புதிய டிஜிட்டல் தளத்தை இன்று (நவ.,21) அறிமுகப்படுத்தியது. கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. மண்டல பூஜைக்காக, கடந்த 17ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. இதையொட்டி பக்தர்களின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வெளிமாநில பக்தர்கள் எவ்வித மொழி தடையும் இன்றி தகவல்களை எளிதாக பெறும் வகையில், கேரள உள்ளாட்சி துறை சார்பில் சரண் என்ற புதிய டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய ஆறு மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தளத்தை, கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.எம்.ஷாஜி இன்று தொடங்கி வைத்தார். பக்தர்களின் வசதிக்காக பிரத்யேகமாக வடிவமைத்துள்ள இந்தத் தளத்தை பயன்படுத்த தனியாக எந்த செயலியையும் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய தேவையில்லை எனவும், அதற்கு பதிலாக, மொபைல் போனில் உள்ள ‘க்யூ.ஆர்., கோடு’ மூலம் ஸ்கேன் செய்து நேரடியாக பயன்படுத்தலாம் எனவும் கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் தளத்தின் மூலம், பக்தர்கள் அருகில் உள்ள தங்குமிடங்களை எளிதில் கண்டறியலாம். இதுதவிர, கோவிலின் தினசரி பூஜை நேரங்கள், அன்னதானம் நடக்கும் இடங்கள், சிறப்பு பஸ் சேவைகள், அவசர மருத்துவ உதவி மையங்களுக்கான நேரடி வரைபட வசதிகள் இத்தளத்தில் உள்ளன. இதேபோல் பக்தர்கள் செல்லும் வழித்தடங்கள் மற்றும் தங்குமிடங்களில் உள்ள துாய்மை குறித்து பக்தர்கள் மதிப்பீடு வழங்கவும், ஏதேனும் குறைகள் இருந்தால் உடனே புகார்களை பதிவு செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.