உணவு வீணாவதை கட்டுப்படுத்த புதிய சட்டம்
பெங்களூரு: ஒரு வேளை உணவு கிடைக்காமல், ஏழைகள், ஆதரவற்றோர் பரிதவிப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள் என, பல்வேறு இடங்களில் பெருமளவில் உணவு வீணாக, குப்பையில் கொட்டப்படுகிறது.இது குறித்து, பெங்களூரில் உணவுத்துறை அமைச்சர் முனியப்பா கூறியதாவது:ஆயிரக்கணக்கான மக்கள், வறுமையால் வயிற்றுக்கு உணவின்றி வாடுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், நிகழ்ச்சி ஹால்களில் உணவு வீணாவதை, பார்க்கிறோம். உணவு வீணாவதை தடுக்க புதிய சட்டம் வகுக்க, அரசு திட்டமிட்டுள்ளது.நாட்டில் ஆண்டுதோறும், 90,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு வீணாகிறது. உணவை வீணாக்காமல், ஏழைகளிடம் கொண்டு சேர்க்கவும், உணவை சரியாக பயன்படுத்துவது குறித்தும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் தலைமையிலான அரசு, 'அன்னபாக்யா' திட்டத்தை கொண்டு வந்துள்ளது. யாரும் பசியோடு வாடக்கூடாது என்ற நோக்கில், அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தியது.இவ்வாறு அவர் கூறினார்.