உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்டுமான தளங்களுக்கு புதிய கட்டுப்பாடு துாசி பறக்கவிட்டால் ரூ.50,000 அபராதம்

கட்டுமான தளங்களுக்கு புதிய கட்டுப்பாடு துாசி பறக்கவிட்டால் ரூ.50,000 அபராதம்

புதுடில்லி,:காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த, கட்டுமான தளங்களுக்கு புதிய கட்டுப்பாட்டை டில்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் அதிகப்படியான துாசியை பறக்கவிட்ட கட்டுமானங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.டில்லியில் காற்று மாசு மோசமான நிலையை எட்டி வருகிறது. குளிர்காலத்தில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. இதற்காக 21 அம்ச செயல்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.காற்று மாசு அதிகம் உள்ள பகுதிகளில் ஸ்ப்ரே இயந்திரம் மற்றும் 20 தண்ணீர் தெளிப்பான்களை என்.டி.எம்.சி., எனும் புதுடில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் பயன்படுத்தியுள்ளது.பொது இடங்களில் குப்பை வீசுதல், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக், கழிவுகள் அல்லது காய்ந்த இலைகளை பொது இடங்களில் எரித்தல் உள்ளிட்ட விதிகளை மீறிய 290 பேருக்கு மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறை நோட்டீஸ் வழங்கி, 48,747 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது.நகரில் காற்று மாசுபாடுக்கு கட்டுமான நிறுவனங்களின் பங்களிப்பு அதிகம் என்ற குற்றச்சாட்டு எப்போதுமே உள்ளது. இதனால் கட்டுமானங்கள் நடக்கும் பகுதிகளில் என்.டி.எம்.சி., கண்காணிப்புக்குழுவினர் திடீர் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.ஏற்கனவே அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் கட்டுமான தளங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் உடனடியாக அபராதம் விதிக்கப்படுகிறது.தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி இந்த அபராதம் விதிக்கப்படுகிறது. புதன்கிழமை வரை 30 கட்டுமான தளங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.தவிர கட்டட இடிப்பு, துாசு கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவிக்கும்படி கட்டுமான நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.இதற்காக மாசுக் கட்டுப்பாடு சுயமதிப்பீடு என்ற தனி இணையதளத்தை டில்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சுயமதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ