உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விளம்பரங்களுக்கு புதிய கட்டுப்பாடு: தொழில் துறையினர் அதிருப்தி

விளம்பரங்களுக்கு புதிய கட்டுப்பாடு: தொழில் துறையினர் அதிருப்தி

புதுடில்லி : பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களில் விளம்பரங்கள் செய்வதற்கு, சுய உறுதிமொழி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது; இது இன்று முதல் நடைமுறைக்கு வந்த உள்ள நிலையில், இது சார்ந்த தொழில் துறையினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் மத்திய அரசு தொடர்பான ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றம், மே 7ம் தேதி சில உத்தரவுகள் பிறப்பித்தது. விளம்பரங்களில் தவறான வழிகாட்டும் தகவல்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன், சுய சான்றிதழ் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இது, ஜூன், 18ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நம்பகத்தன்மை

இதன்படி, விளம்பரம் தரும் நிறுவனங்கள், விளம்பர ஏஜென்சிகள், இதற்கென உருவாக்கப் பட்டுள்ள இணையதளத்தில், அந்த குறிப்பிட்ட விளம்பரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும். அந்த விளம்பரத்தில் மக்களை தவறாக வழிநடத்தும் எந்தத் தகவலும் இல்லை. எந்தப் பொய் தகவலும் இல்லை என்பதை அவர் குறிப்பிட வேண்டும். இந்த சுய உறுதிமொழி சான்றிதழ்களுடன்தான், பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.நுகர்வோருக்கு சரியான தகவல்கள் கிடைக்க வேண்டும், குறிப்பிட்ட பொருள் மீது நம்பகத்தன்மை ஏற்படுத்த வேண்டும், குறிப்பிட்ட பிராண்டு தொடர்பான வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கக் கூடிய கட்டுப்பாடாக இருந்தாலும், இதில் சில சிக்கல்களும், தொந்தரவுகளும் இருக்கும் என, விளம்பர ஏஜென்சிகள், ஊடக நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.இந்த துறை நிபுணர்கள் இது குறித்து கூறியுள்ளதாவது: இந்த புதிய கட்டுப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு, விளம்பரம் தரும் நிறுவனங்கள், விளம்பர ஏஜென்சிகள் உள்ளிட்டவற்றில், சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இது கூடுதல் செலவுடன், அதிக நேரமும் எடுத்துக் கொள்ளும். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட விளம்பரம் தொடர்பான மதிப்பீடுகள் என்னவாக இருக்கும் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டும். மேலும், அந்த விளம்பரம் தொடர்பான விமர்சனங்கள் எழுவதை தடுப்பதற்கான முன் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.இதற்காக நிறைய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு, விளம்பரத்தை அளிக்கும் நிறுவனங்கள், விளம்பரத்தை வடிவமைக்கும் விளம்பர நிறுவனங்கள், அதை வெளியிடுவதற்கு உதவும் விளம்பர ஏஜென்சிகள் தள்ளப்படும். இதனால், அதிக விளம்பரங்கள் வெளியிடுவது குறையும் அல்லது தவிர்க்கப்படும். இது, பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்களுக்கு, வருவாய் பாதிப்பை ஏற்படுத்தும்.மேலும், இது 'ரெட்டேப்' எனப்படும் அதிகார துஷ்பிரயோகத்தை உருவாக்கும் அபாயமும் உள்ளது. அதிகாரிகளின் தயவில் இருக்க வேண்டிய நிலையை, நிறுவனங்கள், விளம்பர ஏஜென்சிகள் உள்ளிட்டவை சந்திக்க நேரிடும். முன்பு துார்தர்ஷன் மட்டுமே இருந்தபோது, அதில் வரும் விளம்பரங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்தனர். தற்போது விளம்பரங்கள் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது.

நடைமுறை சிக்கல்

இந்த கட்டுப்பாடுகள், விளம்பரத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும். அதே நேரத்தில் தற்போதுள்ள பல நிர்வாக, நடைமுறை சிக்கல்களையும் கவனிக்க வேண்டும். இந்த சுய உறுதிமொழி சான்றிதழ்களுக்கு மாற்றாக, தற்போதுள்ள சட்டங்களை வலுவாக்குவதுடன், அதை தீவிரமாக செயல்படுத்த முயற்சி செய்தாலே, இந்தப் பிரச்னையை சமாளிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்திய பத்திரிகைகள் சங்கமும், மத்திய செய்தி - ஒலிபரப்பு துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பிஉள்ளது. 'இந்த புதிய நடைமுறையில் பல சிக்கல்கள் உள்ளதால், அதை செயல்படுத்துவதை தற்போதைக்கு ஒத்தி வைக்க வேண்டும். 'ஏற்கனவே உள்ள நடைமுறைகளை வலுப்படுத்தலாம்' என்று பரிந்துரைத்துள்ளது. மருந்து அல்லது உணவுப் பொருட்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Muthukumarkmd Muthukumar
ஜூன் 18, 2024 20:22

விளம்பரங்களின் உண்மைத் தன்மை அனைவருக்கும் தெரியும்படி இருக்க வேண்டும். அவர்கள் தரும் பூத கண்ணாடி கொண்டல்லவா பார்க்க வேண்டும். இதற்கும் ஒரு வழி செய்ய வேண்டும்.


Muthukumarkmd Muthukumar
ஜூன் 18, 2024 20:18

விளம்பரங்களின் உண்மைத்துவம் தெரிய வேண்டும். அத்தோடு அவர்கள் தரும் குறிப்புகளை, படிக்க பூத கண்ணாடி கொண்டே படிக்க வேண்டும்.. இதற்கும் ஒரு வழி செய்ய வேண்டும்.


Sridhar
ஜூன் 18, 2024 11:56

ஒரு சுய நற்சான்றிதழ் கொடுப்பதற்க்கே இவர்கள் இவ்வளவு அஞ்சுகிறார்கள் என்றால், விளம்பரங்களில் பொய் எந்த அளவுக்கு புரையேறிப்போயிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். போலிவிளம்பரம் கொடுப்பவர்களை இன்னும் கடுமையான சட்டங்கள் மூலம் தண்டிக்கவேண்டும். குறிப்பாக, மருத்துவ துறையில் மிகவும் அவசியமாகிறது.


jaya
ஜூன் 18, 2024 11:01

விளம்பரத்தில் இவனுக உண்மைக்கு சம்பந்தமே இல்லாமல் கதைவிடுவானுக , உண்மையை சொல்லுங்க என்றால் வலிக்கிறது . மக்கள் விழித்துக்கொள்வார்களே என்ற பயம், என்ன என்ன கதையெல்லாம் சொல்லுறானுக .


Velantex Ram
ஜூன் 18, 2024 10:52

மிகச் சரியான முடிவு


Siva
ஜூன் 18, 2024 09:43

உண்மை கசக்கும்.


ديفيد رافائيل
ஜூன் 18, 2024 09:28

இதுல இருந்து என்ன தெரிய வருதுன்னா fraud பண்ணி தான் பொருளை விற்கனும்னு முடிவுல இருக்கானுக போல. நம்பகத்தன்மையுடன் விளம்பரம் போட்டா மக்கள் அந்த பொருளை வாங்க மாட்டாங்கன்னு fraud பண்ற company க்கு நல்லாவே தெரியுது.


Ramanujan
ஜூன் 18, 2024 08:54

இது என்ன வேடிக்கையாய் இருக்கிறது. அரசாங்கம் சென்சார் செய்தல் ஆ வூ என்று கத்துவார்கள். உண்மைதான் என்று ஒரு உறுதிமொழி கொடுக்க கஷ்டமாயிருக்கிறது . அப்போ எல்லாம் வூரை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.


Sampath Kumar
ஜூன் 18, 2024 08:35

எதுக்கு அதிருப்தி


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை