முன்கூட்டியே நிலச்சரிவு எச்சரிக்கை பெறும் மாவட்டமாகிறது நீலகிரி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி, ஆக. 24-தென்மேற்கு பருவமழை காலத்தில் நிலச்சரிவு தொடர்பான வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கையை முன்கூட்டியே பெற்ற முதல் மூன்று மாவட்டங்களில் தமிழகத்தின் நீலகிரியும் இடம் பிடித்துள்ளது. கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, பஞ்சாப், அசாம், ஹிமாச்சல், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். மழை பொழிவு குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தென்மே ற்கு பருவமழை சீசன் முன்கூட்டியே துவங்கும். இதனால், கேரளா மற்றும் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பொழிவு இருக்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கிய நிலையில், மலை சார்ந்த மாவட்டங் களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட் டன. குறிப்பாக கேரளாவில் அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால், நிவாரணப் பணிகளுக்காக மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். அதே போல் வானிலை முன்னறிவிப்பு வாயிலாகவும் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வகையில் தென்மேற்கு பருவமழையின் போது, நிலச்சரிவு தொடர்பான வானிலை முன்னறிவிப்பை புவியியல் ஆய்வு மையம் இந்த ஆண்டு வெளியிட்டது. பார்லி., மழைக்கால கூட்டத்தொடரின் போது இந்த விபரத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார். ' இந்த ஆண்டு பருவ மழை தொடங்கியதில் இருந்து, நிலச்சரிவு தொடர்பான வானிலை முன்னறிவிப்பு மற்றும் பரிசோதனை முறையிலான முன்னறிவிப்புகளை, எட்டு மாநிலங்களில் உள்ள 21 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டது' என கூறியிருந் தார். அதன்படி தமிழகத்தின் நீலகிரி, மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங், கலிம்போங் மாவட்டங்களுக்கு நிலச்சரிவுக்கான வானிலை முன்னறிவுப்பும், கேரளாவின் வயநாடு, இடுக்கி, கர்நாடகாவின் குடகு, உத்தராகண்டின் ருத்ரபிரயாக், உத்தரகாசி, டெஹ்ரி கார்வால், ஹிமாச்சலின் சிம்லா, சிக்கிமின் சோரெங், காங்டாக் மற்றும் நாகாலாந்தின் திமாபூர், கோஹிமா ஆகிய மாவட்டங்களுக்கு பரிசோதனை முறையிலான நிலச்சரிவு முன்னறிவிப்பும் வழங்கப்பட்டது. அபாயம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 15 சதவீத இடங்கள் அதிக அளவு நிலச்சரிவு அபாயம் கொண்டவையாக கண்டறியப்பட்டுள்ளன. அதில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் மட்டும் 29 சதவீத அளவுக்கு நிலச்சரிவு அபாயம் உள்ளது. உத்தராகண்ட் மற்றும் நாகாலாந்தில் முறையே 22 மற்றும் 21 சதவீத நிலச்சரிவு அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 6 சதவீத அளவுக்கு அதிக நிலச்சரிவு அபாயம் இருக்கிறது. 19 சதவீத அளவுக்கு மிதமான நிலச்சரிவு அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.