உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் மாற்றம் குறித்து யாரும் பேசக்கூடாது: கார்கே வாய்ப்பூட்டு!

முதல்வர் மாற்றம் குறித்து யாரும் பேசக்கூடாது: கார்கே வாய்ப்பூட்டு!

பெங்களூரு ; 'கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் குறித்து யாரும் பேசக் கூடாது' என, கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டு உள்ளார். மஹாராஷ்டிராவில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, இந்த கறார் உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு நடக்கிறது. துணை முதல்வர் சிவகுமாருக்கு, முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. சிவகுமார் முதல்வராக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும், சித்தராமையாவே ஐந்து ஆண்டுகளும் பதவியில் நீடிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் கூறுகின்றனர்.

மேலிடம் ஆதரவு

இந்நிலையில், முடா வழக்கில் சித்தராமையா மீது அமலாக்க துறை வழக்குப் பதிவு செய்ததும், அவர் பதவி விலகுவார் என்று சிவகுமாரின் ஆதரவாளர்கள் நினைத்தனர். ஆனால் சித்தராமையாவுக்கு கட்சி மேலிடம் ஆதரவாக உள்ளது.இந்நிலையில், சமீபத்தில் டில்லி சென்ற கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் சிலர், கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்து முதல்வர் பதவி தொடர்பாக தங்களது கருத்துக்களை தெரிவித்துவிட்டு வந்துஉள்ளனர்.

சோனியா, ராகுல்

முதல்வர் பதவிக்காக நடக்கும் சண்டை குறித்து, சோனியா, ராகுல் கவனத்திற்கும் சென்றது. அவர்கள் இருவரும், கார்கேயை அழைத்து, 'உங்கள் மாநிலத்தில் முதல்வர் பதவிக்காக நடக்கும் பிரச்னையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுங்கள்' என்று கூறியதாக சொல்லப்படுகிறது.இதனால் கடும் கோபம் அடைந்த கார்கே, 'இனிமேல் முதல்வர் பதவி மாற்றம் குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பேச கூடாது. எல்லாவற்றையும் நீங்களே பேசிவிட்டால், மேலிடம் என்று நாங்கள் எதற்கு இருக்கிறோம். வாயை மூடிக்கொண்டு அமைதியாக உங்களின் வேலையை பாருங்கள்' என்று கடுமையாக எச்சரித்து உள்ளார்.

ஊழல் ஆட்சி

இந்த எச்சரிக்கைக்கு பின், மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலும் உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில், 'பா.ஜ., ஆட்சிக்கு வராது. காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும்' என்று கருத்துக் கணிப்புகள் கூறின.ஆனால், அவை அனைத்தும் பொய்யானது. பா.ஜ., மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தது. இதற்கு ஹரியானா மாநில காங்கிரசில் நடந்த முதல்வர் பதவிக்கான கடும் போட்டியே காரணம்.'காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்' என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறிய பின், மூத்த தலைவர்கள் முதல்வர் பதவிக்கு சண்டை போட்டுக் கொண்டனர்.இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஹரியானாவில் தேர்தல் பிரசாரத்தின் போது, 'காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் எல்லாம் முதல்வர் பதவிக்கு சண்டை நடக்கிறது. கர்நாடகாவிலும் ஊழல் ஆட்சி நடக்கிறது. 'அங்குள்ள முதல்வர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. முதல்வர் பதவிக்காக சண்டை போடும் கட்சி உங்களுக்கு தேவையா' என்று பிரசாரம் செய்தார். இதனால் ஹரியானா மக்கள், காங்கிரசை நிராகரித்து விட்டனர்.

கூட்டணி ஆட்சி

மஹாராஷ்டிராவில் விரைவில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று சொல்லப்படுகிறது.மஹாராஷ்டிராவின் அண்டை மாநிலம் கர்நாடகம். இங்கு முதல்வர் பதவிக்கு சண்டை போட்டுக் கொண்டால், இதை வைத்து மஹாராஷ்டிராவிலும் பிரதமர் மோடி பிரசாரம் செய்து, பா.ஜ., கூட்டணியை வெற்றி பெற வைத்து விடலாம் என்று கார்கே கருதுகிறார். இதனாலேயே, முதல்வர் மாற்றம் குறித்து பேசக்கூடாது என்று அவர் கறார் உத்தரவு பிறப்பித்திருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை