| ADDED : செப் 18, 2024 07:16 PM
புதுடில்லி : ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல. இத்திட்டத்தை அமல்படுத்துவற்கான முயற்சியை முன்னெடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி நன்றியை தெரிவித்துள்ளார்.நாடு முழுதும் ஒரே நேரத்தில், மாநில சட்டசபைகள் மற்றும் லோக்சபாவுக்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆராய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், மத்திய அரசு உயர்மட்டக் குழு அமைத்தது.அரசியல் கட்சிகள், சட்டக் கமிஷன் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை கேட்டறிந்த இந்த உயர்மட்டக் குழு, கடந்த மார்ச் 15ல், ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.பிரதமர் மோடி தலைமையில் இன்று (செப்.,18) நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ராம்நாத் கோவிந்த்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. குளிர்கால பார்லிமென்ட் கூட்டத்தொடரில் இது குறித்த மசோதா தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து பிரதமர் மோடி தனது ‛எக்ஸ்' தளத்தில் பதிவேற்றியுள்ளதாவது, ஒரு நாடு ஒரு தேர்தல் நடத்துவதற்கான உயர்மட்ட குழு பரிந்துரைகளை அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. இத்திட்டம் எந்த வித அரசியல் நோக்கம் கொண்டது அல்ல. ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது மக்களின் தேவையாகும். நமது ஜனநாயகத்தை துடிப்பாக மாற்றுவதற்கு இது ஒரு முக்கியமான முயற்சியாகும். இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ள ராம்நாத் கோவிந்திற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பதிவேற்றியுள்ளார்.