உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் கூறிய வார்த்தைக்கு எதிர்ப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

முதல்வர் கூறிய வார்த்தைக்கு எதிர்ப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

பெங்களூரு: பா.ஜ.,வினர் குறித்து முதல்வர் சித்தராமையா பயன்படுத்திய வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டமேலவையில் இருந்து அக்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து, சட்ட மேலவையில் விவாதங்கள் நடந்தன. இதற்கு அரசு தரப்பில் முதல்வர் சித்தராமையா நேற்று பதில் அளித்து பேசியதாவது:மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்கும் நிதியில், பெரிய அளவில் அநீதி நடக்கிறது. 15வது நிதி கமிஷன் கர்நாடகாவுக்கு சிறப்பு மானியமாக 5,000 கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. இந்த ஆண்டு மாநிலத்தில் இருந்து 4.30 லட்சம் கோடி ரூபாய், வரி செலுத்தப்பட்டுள்ளது.ஆனால் மத்திய அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் வழங்குகிறது. நம்மிடம் 100 ரூபாய் வசூல் செய்தால், அதில் 12 முதல் 13 ரூபாய் மட்டும் திரும்பி தருகின்றனர். பத்ரா மேலணை திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 5,300 கோடி ரூபாய் விடுவிக்கவில்லை. மத்திய நீர்வள அமைச்சரை நானும், துணை முதல்வர் சிவகுமாரும் சந்தித்து பேசினோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை.இவ்வாறு பேசிக் கொண்டு இருந்தார்.

பொய்க்கு பெயர் பா.ஜ.,

அப்போது பா.ஜ., - ம.ஜ.த., உறுப்பினர்கள் குறுக்கிட்டனர். 'தங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்க வேண்டும்' என, கைகளை உயர்த்தி அனுமதி கேட்டுக் கொண்டே இருந்தனர். இதனால் கோபம் அடைந்த சித்தராமையா, “முதலில் நான் பேசி முடிக்கிறேன்; பின்னர் நீங்கள் பேசுங்கள்,” என்று கூறினார்.ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கவில்லை. கடும் கோபம் அடைந்த, சித்தராமையா, எதிர்க்கட்சி உறுப்பினர்களை பார்த்து, “அமருங்கள்... அமருங்கள்,” என்று கூறினார். அப்போதும் யாரும் கேட்கவில்லை.இதையடுத்து முதல்வர் தொடர்ந்து பேசுகையில், ''பா.ஜ.,வினர், கன்னடர்களுக்கு எதிரானவர்கள். பொய்க்கு இன்னொரு பெயர் பா.ஜ., அவர்களுடன் இப்போது ம.ஜ.த.,வும் சேர்ந்துவிட்டது. உண்மையை பேசினால் பா.ஜ.,வால் தாங்க முடியாது,'' என்றார்.இதற்கு பா.ஜ.,வினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மன்னிப்பு கேட்க மறுப்பு

இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற சித்தராமையா, ஒரு வார்த்தையைக் கூறினார். தொடர்ந்து ''இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். மாநில மக்கள் உங்களை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். உங்களை பார்த்து சீ... துா என்று சொல்கின்றனர். உங்களுக்கு வெட்கம் இல்லையா?'' என்று ஆவேசமாக பேசினார்.தங்களை பற்றி முதல்வர் கூறிய வார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினரும் கோஷம் எழுப்பியதால், அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.இதையடுத்து மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, சபையை 10 நிமிடம் ஒத்திவைத்தார்.மீண்டும் கூட்டம் துவங்கியதும், முதல்வர் மன்னிப்பு கேட்க, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் சித்தராமையா மறுத்துவிட்டார்.முதல்வர் கூறிய வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக, மேலவை தலைவர் கூறியும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கவில்லை. முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து, வெளிநடப்பு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்