தலா ரூ.6,500: நன்கொடை திரட்டும் பாக்., பயங்கரவாதிகள்: இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள், இந்தியாவில் மீண்டும் தொடர் தாக்குதல்களை நடத்த தங்கள் ஆதரவாளர்களிடம் தலா, 6,500 ரூபாய் நன்கொடை வசூலிக்க துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டில்லியின் செங்கோட்டை பகுதியில், கடந்த 10ம் தேதி மாலை போக்குவரத்து நெரிசலில் நின்றிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது. இதில், 15 பேர் உயிரிழந்தனர். இந்த காரை ஓட்டி வந்த ஜம்மு -- காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் நபியும் உயிரிழந்தார். இந்த வழக்கு என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், இது பயங்கரவாத செயல் என்பது உறுதியானது. கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு சில நாட்களுக்கு முன், காஷ்மீரில் ஜெய்ஷ் - இ -- முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியவர்களை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் விசாரணையில், ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றும் காஷ்மீரை சேர்ந்த டாக்டர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. டாக்டர்கள் ஆதில், முஸாமில் மற்றும் ஷாஹீன் என்ற பெண் டாக்டர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பதுக்கி வைத்திருந்த, 360 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கைதுகளால் பதற்றமடைந்த டாக்டர் உமர் நபி, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காருடன் தப்பி ஓட முயன்ற போது, அது டில்லி செங் கோட்டை அருகே வெடித்து சிதறியது. இதில், 15 பேர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து, கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்களை துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இயக்கியது, பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் - இ -- முகமது பயங்கரவாதிகள் என தெரிந்தது. இந்த கும்பல், வரும் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று டில்லியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்த மிகப்பெரிய சதி திட்டம் தீட்டியிருந்தது விசாரணையில் தெரிந்தது. உத்தரவு இதையடுத்து, மத்திய உளவுத்துறையிடம் சிறிய தகவல் கிடைத்தாலும் அது குறித்து ஆராய்ந்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, விசாரணையில் கிடைத்த குறிப்புகளை வைத்து புதிய தகவல்களை உளவுத்துறை சேகரித்துள்ளது. இதுபற்றி உளவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாக்.,கின் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள், இந்தியாவின் பல்வேறு இடங்களில், 'பியாதீன்' எனப்படும், தற்கொலை படை தாக்குதல் நடத்த, 'டிஜிட்டல்' முறையில் நிதி திரட்டி வருகின்றனர். இதை டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு முன்னரே துவங்கிவிட்டனர். இதில் பாகிஸ்தானின், 'சதாபே' என்ற பணப்பரிமாற்ற செயலி முக்கிய பங்கு வகிக்கிறது. விசாரணை இதற்காக அவர்கள் பல்வேறு சமூக வலைதளங்களில் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். அதில், 'பயங்கரவாதிகளுக்கு, தாக்குதலுக்கு தேவையான உபகரணங்கள் வழங்க, ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும் தலா, 6,500 ரூபாய் வழங்க முன் வர வேண்டும். பணம் தருபவர்களும் போராளிகளாக கருதப்படுவர்' என, கூறப்பட்டுள்ளது. இந்த பணத்தை, 'ஒயிட் காலர்' பயங்கரவாதிகளான டாக்டர்கள் குழு உள்ளிட்டோருக்கு வழங்க இருந்தனர். தற்போது இந்த டிஜிட்டல் நன்கொடை குறித்த விசாரணையையும் என்.ஐ.ஏ., துவங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.