உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்ரீராமர் கட்டிய பஞ்சலிங்கேஸ்வரர் கோவில்

ஸ்ரீராமர் கட்டிய பஞ்சலிங்கேஸ்வரர் கோவில்

அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை முடிந்த பின், தினமும் ராமரை தரிசிக்க நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் அயோத்திக்கு படையெடுக்கின்றனர். ராமர் கோவில் திறக்கப்பட்ட இந்த நேரத்தில், ராமரை பற்றிய பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. இதில் ராமரே கட்டியதாக கூறப்படும் பஞ்சலிங்கேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும்.பாகல்கோட், இளகல்லின் கெலுார் கிராமத்தில் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள லிங்கங்களை ஸ்ரீராமரே பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். சீதா, லட்சுமணனுடன் ராமர் வனவாசம் செல்லும் போது, ஐஹொளே வழியாக, கெலுார் கிராமத்துக்கு வந்தார். கிராமத்தை அடைந்த போது, காலை பொழுது விடிந்தது.அப்போது சிவன் பூஜை செய்ய, ஐந்து லிங்கங்களை ராமர் பிரதிஷ்டை செய்து பூஜித்தார். இந்த லிங்கங்கள் சத்யோஜாத தேவா, தத்புருஷ தேவா, வாமன லிங்கேஸ்வரா, அகோர தேவா, ஈஷான்ய தேவா என, அழைக்கப்படுகின்றன.

சப்த கன்னியர்

கோவிலின் சுவற்றில், சப்த கன்னியரின் விக்ரகம் உள்ளது. ராமனே இந்த கோவிலை கட்டியதாக, பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் ராம லிங்கேஸ்வரா கோவில் என, அழைக்கின்றனர். பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்கள் ஐஹொளே பட்டதகல்லு, மஹாகூடா கிராமத்தின் அருகில், கெலுாரு கிராமம் உள்ளது.சுற்றும் முற்றும் மலைகள், குன்றுகளுக்கு நடுவில் உள்ள கிராமத்தில் ஏரி உள்ளது. இதனை 'ராம தீர்த்தம்' என அழைக்கின்றனர். 6 ஏக்கர் பரப்பளவில், இந்த ஏரி உள்ளது. இதன் அருகிலேயே பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், ராமர் வரலாற்றின் சான்றாக உள்ளது.ராமர் லிங்கம் பிரதிஷ்டை செய்த பின், சாளுக்கியர் காலத்தில் கோவில் கட்டப்பட்டது. பாதாமியில் சிவயோக மந்திரில், இத்தகைய பஞ்சலிங்க கோவில் உள்ளது. இதுதவிர பஞ்சலிங்கங்கள், ஒரே இடத்தில் அமைந்துள்ள கிராமம் என்றால், அது கெலுார் கிராமம் தான்.

சூரியன் தரிசனம்

தீபாவளி நேரத்தில், சூரிய கதிர்கள் பஞ்சலிங்கேஸ்வர கோவில் லிங்கத்தின் மீது நேரடியாக விழும் என்பது குறிப்பிடத்தக்கது. கிராமத்தில் மற்றொரு சிறப்பும் உள்ளது. இங்கு வசிக்கும் பலரின் பெயர் ராமா, ராமண்ணா, ராமப்பா என, ராமர் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். ஜாதி, மதம் வேறுபாடு இல்லாமல் ராமரின் பெயரை வைக்கின்றனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்