| ADDED : நவ 04, 2025 04:07 PM
வாரணாசி; வாரணாசியில், விமானம் புறப்பட்ட சில நொடிகளில் அதன் அவசர வழிக்கதவை பயணி திறக்க முயற்சித்த சம்பவம் பற்றிய விவரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; உ.பி. மாநிலம் வாரணாசியில் இருந்து மும்பைக்கு ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் விமானம் QP 1497 ஒன்று புறப்பட்டது. விமானத்தில் பயணிகள் அனைவரும் அமர்ந்திருந்தனர்.ஓடுபாதையில் இருந்து வானத்தில் உயர பறக்க புறப்பட்ட சில விநாடிகளில் அந்த விபரீதம் அரங்கேறியது. உள்ளே உட்கார்ந்திருந்த பயணி சுஜித் சிங் என்பவர், திடீரென விமானத்தின் அவசர வழிக்கான கதவை திறக்க முயற்சித்துள்ளார்.இதையறிந்து அதிர்ச்சி அடைந்த விமானிகள் குழு, உடனடியாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் விமானத்திற்கு என ஏற்படுத்தப்பட்டு உள்ள நிறுத்துமிடத்திற்கு விமானத்தை ஓட்டிச் சென்று நிறுத்தினர்.தொடர்ந்து, பாதுகாப்பு படையினர், விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக கீழே இறக்கிவிட்டனர். அவசர வழிக் கதவை திறக்க முயற்சித்த சுஜித் சிங்கிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ஆர்வத்தின் காரணமாக அவசர வழிக்கதவை திறக்க முயற்சித்ததாக சுஜித் சிங் கூறி உள்ளார். அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். அதன் பின்னர், மீண்டும் விமானம் மும்பைக்கு புறப்பட்டுச் சென்றது. இதுகுறித்து ஆகாசா விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் பேசுகையில், QP 1497 விமானத்தின் அவசர வழிக்கதவை பயணி ஒருவர் திறக்க முயற்சி செய்திருக்கிறார். அவர் அடையாளம் காணப்பட்டு, இறக்கி விடப்பட்டார். விமானம் முற்றிலும் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்றார்.