| ADDED : பிப் 22, 2024 06:55 AM
பெங்களூரு: தவறான சிகிச்சையால் நோயாளியின் பேச்சுத்திறன் பாதிக்கப்பட்டதால், அவரது குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெங்களூரின், தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர் டக்ளஸ் லுாயிஸ். சுவாசப்பை பிரச்னையால் அவதிப்பட்ட அவர், மணிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 2003ல் இவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.அறுவை சிகிச்சைக்கு பின், டக்ளஸ் லுாயிஸ் பேச்சுத் திறனை இழந்தார். இவரது நிலைமைக்கு, அதிகமான அனஸ்தீஷியா கொடுத்ததே காரணம் என்பது தெரிந்தது.அனஸ்தீஷியா பிரிவு வல்லுனருக்கு பதிலாக, இதயநோய் தொடர்பான அனஸ்தீஷியா பிரிவில் பயிற்சி பெற்று வந்த டாக்டர் ஒருவர், டக்ளாஸ் லுாயிசுக்கு அனஸ்தீஷியா செலுத்தியிருந்தார்.தவறான சிகிச்சை குறித்து கேள்வி எழுப்பி, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தை லுாயிஸ் நாடினார். விசாரணை நடத்திய நீதிமன்றம், 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, மணிப்பால் மருத்துவமனைக்கு உத்தரவிட்டது. கூடுதல் நிவாரணம் கேட்டு, தேசிய நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, 2015ல் டக்ளாஸ் லுாயிஸ் உயிரிழந்தார்.அதன்பின் அவரது மனைவி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:அறுவை சிகிச்சையின்போது, நோயாளிக்கு அளவுக்கு அதிகமான அனஸ்தீஷியா கொடுத்ததே பாதிப்புக்கு காரணம். அனைத்து அம்சங்களையும் மனதில் கொண்டு, நியாயமான நிவாரணம் வழங்கும்படி, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாயை மருத்துவமனை நிர்வாகம் வழங்க வேண்டும்.இவ்வாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.