உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  குஜராத்தில் ரூ.3 லட்சத்தை தாண்டிய தனிநபர் வருமானம்

 குஜராத்தில் ரூ.3 லட்சத்தை தாண்டிய தனிநபர் வருமானம்

காந்தி நகர்: 'குஜராத்தில் தனிநபர் வருமானம், முதன்முறையாக 3 லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது. இது, மாநிலத்தின் நிலையான வளர்ச்சி வேகத்தையும் பொருளாதார அடிப்படைகளை வலுப்படுத்துவதையும் பிரதிபலிக்கிறது' என, மாநில அரசு தெரிவித்து உள்ளது. குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, பொருளாதார நிலையை அதிகரிக்க பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல் உட்பட பல்வேறு நடவடிக்கை காரணமாக, அங்கு தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது. இங்கு, முதன்முறையாக தனிநபர் வருமானம், 3 லட்சம் ரூபாயை தாண்டி உள்ளது. இது குறித்து, மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2023- - 24ம் நிதியாண்டில், ஜி.எஸ்.டி.பி., எனப்படும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் குஜராத், 24.62 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதையடுத்து, பெரிய பொருளாதார மாநிலங்களின் வரிசையில், மஹாராஷ்டிரா, தமிழகம், உத்தர பிரதேசம், கர்நாடகாவைத் தொடர்ந்து, குஜராத் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2012 - 13 மற்றும் 2023 - 24ம் நிதியாண்டுகளுக்கு இடையே, சராசரியாக, 8.42 சதவீத வளர்ச்சி விகிதத்தை குஜராத் எட்டியுள்ளது. இது, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பொருளாதாரங்களைக் கொண்ட அனைத்து முக்கிய மாநிலங்களிலும் மிக உயர்ந்ததாகும். அதிகபட்ச ஜி.டி.பி.,யாக, 7.43 லட்சம் கோடி ரூபாயுடன் உற்பத்தி துறை, மாநிலத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தொடர்ந்து செயல்படுகிறது. தொழில்துறை, விவசாயம் உள்ளிட்ட துறைகளும், பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான பங்கை வழங்கியுள்ளன. கடந்த, 2011 - 12ல், 6.16 லட்சம் கோடி ரூபாயாக இருந்த ஜி.எஸ்.டி.பி., 2023 - 24ல் 24.62 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், குஜராத்தின் தனிநபர் வருமானம், முதன்முறையாக 3 லட்சத்து, 957 ரூபாயாக உயர்ந்துள்ளது. தனிநபர் வருமானத்தில் கர்நாடகா மற்றும் தமிழகம் மட்டுமே குஜராத்தை விட சற்று அதிகமாக உள்ளன. இது மாநிலத்தின் அதிக தொழிலாளர் உற்பத்தித்திறன் மற்றும் பரவலான பொருளாதார பங்கேற்பைக் குறிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை