உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாங்கே ஏரியில் காவிரி ஆரத்தி தடை கேட்டு ஐகோர்ட்டில் மனு

சாங்கே ஏரியில் காவிரி ஆரத்தி தடை கேட்டு ஐகோர்ட்டில் மனு

பெங்களூரு : 'சாங்கே ஏரியில் காவிரி ஆரத்தி நடத்தினால், பல்லுயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, காவிரி ஆரத்திக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.பெங்களூரு சாங்கே ஏரியில் நாளை (21ம் தேதி) காவிரி ஆரத்தி நடத்த பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.இதற்கிடையில், காவிரி ஆரத்திக்கு எதிராக, சுற்றுச்சூழல் ஆர்வலர் கீதா மிஸ்ரா, நேற்று முன்தினம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:நதிக்கு நன்றி சொல்லும் வகையில் பிரார்த்தனைகள், விளக்கு ஏற்றுவது, காவிரி ஆரத்தி நடத்துவதை வரவேற்கிறோம். ஆனால், பாதுகாக்கப்பட்ட சாங்கே ஏரியில் வர்த்தகம் அல்லது கேளிக்கை நடவடிக்கைகள், தற்காலிக மேடைகள் அமைப்பது, ஏரியில் உள்ள பல்லுயிர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும்.இந்நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தால், வணிக நோக்கங்களுக்காக மதம், கலாசார நிகழ்வுகளை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இந்த ஏரி, புலம்பெயர்ந்த பறவைகள், நீர்வாழ் உயிரினங்களின் தாயகமாக உள்ளன. அவைகளுக்கு ஏற்படும் இடையூறை ஏற்றுக் கொள்ள முடியாது.எங்கள் போராட்டம் பக்திக்கு எதிரானது அல்ல. கொண்டாட்டம் என்ற பெயரில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்க கூடாது. எனவே, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.இம்மனு மீதான விசாரணை இன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி ஆரத்தி நடக்குமா, நடக்காதா என்பது உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ