| ADDED : டிச 30, 2025 05:59 AM
புதுடில்லி: உலக 'ரேபிட்' செஸ் தொடரில் வெண்கலம் வென்ற இந்தியாவின் அர்ஜுன், ஹம்பிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். கத்தார் தலைநகர் தோகாவில், உலக செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. முதலில் 'ரேபிட்' பிரிவு போட்டிகள் நடந்தன. பெண்கள் பிரிவில் இந்தியாவின் கொனேரு ஹம்பி 38, ஓபன் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 22, வெண்கலம் கைப்பற்றினர். உலக 'ரேபிட்' பிரிவில் 5 பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை யானார் ஹம்பி. ஏற் கனவே 2 தங்கம் (2019, 2024), ஒரு வெள்ளி (2023), ஒரு வெண்கலம் (2012) வென்றிருந்தார். விஸ்வநாதன் ஆனந்திற்கு பின், இத்தொடரில் பதக்கம் கைப்பற்றிய 2வது இந்திய வீரரானார் அர்ஜுன். இவர்களுக்கு, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'உலக ரேபிட் செஸ் தொடரில் வெண்கலம் வென்ற அர்ஜுன், ஹம்பிக்கு வாழ்த்துகள். இப்போட்டி மீதான இவர்களது அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. இவர்களின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்,' என, தெரிவித்தார்.