உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு மாதத்தில் 4,600 கிலோ பட்டாசு பறிமுதல் போலீஸ் அதிரடி நடவடிக்கை

ஒரு மாதத்தில் 4,600 கிலோ பட்டாசு பறிமுதல் போலீஸ் அதிரடி நடவடிக்கை

புதுடில்லி:தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில், டில்லி மாநகர் முழுதும் போலீஸ் நடத்திய அதிரடி சோதனைகளில் 4,600 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தடை இருப்பினும், அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து சிலர் பட்டாசுகளை வாங்கி வந்து, டில்லி மற்றும் புறநகரில் சட்டவிரோதமாக விற்பனை செய்கின்றனர். துர்கா பூஜா கொண்டாட்டம் மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பலர் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது. இதையடுத்து, டில்லி மாநகரப் போலீசின் தனிப்படையினர் மாநகர் முழுதும் செப்டம்பர் மாத துவக்கத்தில் இருந்தே அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பதர்பூர் மொலாட்பந்த் பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில், 225 கிலோ பட்டாசுகள் செப்டம்பர் 16ம் தேதி பறிமுதல் செய்யப்பட்டு, தரம்வீர் சிங் கைது செய்யப்பட்டார். ஹரியானா மாநிலம் பல்வாலில் இருந்து பட்டாசுகளை கொள்முதல் செய்து, தீபாவளி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அதேபோல், ரஜோரி கார்டன் விஷால் என்கிளேவில் ஒரு வீட்டில், 3,580 கிலோ பட்டாசுகள் செப்டம்பர் 25ம் தேதி பறிமுதல் செய்யப்பட்டது. பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த சுஷில் கக்கர், அவரது மனைவி உபாசனா மற்றும் அவர்களது மகன் சிவம் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப் பட்டனர். உத்தர பிரதேசத்தின் மீரட், காஜியாபாத் மற்றும் ஹரியானா மாநிலம் குருகிராம் ஆகிய இடங்களில் இருந்து பட்டாசுகளை கொள்முதல் செய்ததை மூவ ரும் ஒப்புக் கொண்டனர். தொடரும் செப்டம்பர் 27ம் தேதி வடக்கு டில்லி விஜய் நகரில் 164 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, லலித் குமார் குலாட்டி மற்றும் முகுல் வாசன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். ஹரியானாவின் குருகிராமில் இருந்து பட்டாசுகளை வாங்கி, டில்லிக்கு கொண்டு வந்துள்ளனர். பிந்தாபூர் மதியாலா ஐஸ்கிரீம் தொழிற்சாலை போல செயல்பட்டு வந்த கட்டடத்தில் நேற்று முன் தினம் தனிப்படையினர் அதிரடி சோதனையில், 693 கிலோ பட்டாசுகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றைப் பதுக்கி வைத்திருந்த தில்பாக் சிங் கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலம் குராலியில் பட்டாசுகள் வாங்கியதாக ஒப்புக் கொண்டார். நந்த் நாக்ரி பதக் அருகே ஒரு கடையில் பட்டாசு விற்றுக் கொண்டிருந்த பகவதி பிரசாத், அவரது மகன் தருண் சிங்கால் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, 71 பட்டாசு பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரிடமும் நடத்திய விசாரணையில் மண்டோலியில் ராஜிவ் கோயல் என்பவர் பட்டாசு சப்ளை செய்வதை ஒப்புக் கொண்டனர். மண்டோலியில் ராஜிவ் கோயல் கைது செய்யப்பட்டு, அவரது கிடங்கில் இருந்து 818 பட்டாசு பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. செப்டம்பர் 1ம் தேதி முதல் நேற்று முன் தினம் வரை, டில்லியில் 4,662 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த அதிரடி சோதனை தொடரும் என டில்லி மாநகரப் போலீஸ் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை