உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மார்ச் 17க்கு பின் அரசியல் ஓய்வு பா.ஜ., - எம்.பி., சீனிவாச பிரசாத் முடிவு

மார்ச் 17க்கு பின் அரசியல் ஓய்வு பா.ஜ., - எம்.பி., சீனிவாச பிரசாத் முடிவு

மைசூரு: ''நான் அரசியலுக்கு வந்து, 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. மார்ச் 17க்கு பின், பெரிய அளவில் நிகழ்ச்சி நடத்தி, அதிகாரப்பூர்வமாக அரசியல் ஓய்வை அறிவிப்பேன்,'' என பா.ஜ., - எம்.பி., சீனிவாச பிரசாத் தெரிவித்துள்ளார்.காங்கிரசில் இருந்த சீனிவாச பிரசாத், 2017ல் அன்றைய முதல்வர் சித்தராமையாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். நஞ்சன்கூடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த இவர், மாநில பா.ஜ., துணைத் தலைவராக பதவி வகித்தார்.

எதிர்பாராத வெற்றி

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட, இவருக்கு விருப்பம் இல்லை. ஆனால் திறமையான வேட்பாளர் இல்லாததால், சாம்ராஜ்நகர் தொகுதியில் இவரை பா.ஜ., மேலிடம் களமிறக்கியது; அவரும் வெற்றி பெற்றார்.வயது மற்றும் ஆரோக்கியம் காரணமாக, இம்முறை லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன் என, ஏற்கனவே அறிவித்திருந்தார். கட்சியின் நிகழ்ச்சிகள், கூட்டங்களிலும் பங்கேற்பது இல்லை. எனவே மாற்று வேட்பாளரை, பா.ஜ., தேடி வருகிறது.மைசூரில் நேற்று சீனிவாச பிரசாத் கூறியதாவது:நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக, பல மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தேன். 2024 மார்ச் 17ல், நான் அரசியலுக்கு வந்து, 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. மார்ச் 17க்கு பின், பெரிய அளவில் நிகழ்ச்சி நடத்தி, அதிகாரப்பூர்வமாக அரசியல் ஓய்வை அறிவிப்பேன்.

பா.ஜ.,வுக்கு ஆதரவு

இனி எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்; பகிரங்க பிரசாரத்துக்கும் செல்ல மாட்டேன். ஆனால் அனைவரும் பா.ஜ.,வுக்கு ஆதரவு தாருங்கள் என, மக்களிடம் கேட்டுக் கொள்வேன்.முதல்வர் சித்தராமையா, கிணற்றுக்குள் உள்ள தவளை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, சமுத்திரத்தில் நீந்தும் மனிதர். இருவருக்கும் வித்தியாசம் உள்ளது; ஒப்பிட முடியாது. வாய்க்கு வந்தபடி கத்துவதை, சித்தராமையா கற்று வைத்துள்ளார். இவருக்கும், ஜமீர் அகமதுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது.இருவரும் தேவையின்றி கூச்சலிடுகின்றனர். இவர்கள் பிரசவ வார்டில் கூவினால், பிரசவம் நடந்துவிடும். மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை பற்றி, மனம் போனபடி பேசுகின்றனர். இத்தகைய சித்தராமையா குறித்து, நான் என்ன சொல்வது.

காங்கிரசார் மயக்கம்

வாக்குறுதி திட்டங்களால் வெற்றி பெற்ற அவர்கள், இப்போதும் அதே மயக்கத்தில் உள்ளனர். பிரதமர் மோடி செய்துள்ள வளர்ச்சி பணிகளுக்கு முன்னால், வாக்குறுதி திட்டங்கள் நிற்கின்றவா என்பதை பார்க்கலாம்.'நமது வரி, நமது உரிமை' என, டில்லிக்கு சென்று போராட்டம் நடத்துகின்றனர். கேட்கும் விதத்தில் கேட்டால், நமது பணம் கிடைக்கும். எந்த அரசும் நம்மை ஏமாற்றாது. இதற்கு முன் நான் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த போது, மத்திய அரசிடம் வரி பணத்தை கேட்டேன்; நமது பணம் கிடைத்தது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை