உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முந்தைய ஆட்சியில் அரசியலமைப்பு நசுக்கப்பட்டது எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

முந்தைய ஆட்சியில் அரசியலமைப்பு நசுக்கப்பட்டது எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புதுடில்லி:“அரசியலமைப்பு சட்டத்தை இன்று தலையில் சுமந்து நடனமாடுபவர்கள், ஆட்சியில் இருக்கும்போது, அநீதியான, பிற்போக்குத்தனமான சட்டங்களை இயற்றை அதை நசுக்கினர்,” என, எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். தலைநகர் டில்லியில் 11,000 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: டில்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களாக ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் பா.ஜ.,வின் வெற்றியை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. சில மாதங்களுக்கு முன், டில்லி - ஹரியானா மக்களை ஒருவருக்கொருவர் எதிராக துாண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஹரியானா மக்கள், டில்லி தண்ணீரில் விஷத்தை கலப்பதாக விஷமிகள் பொய் பிரசாரத்தை மேற்கொண்டனர். அவை அனைத்தும் இன்று மாறியுள்ளன. டில்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதி முழுதும், இந்த எதிர்மறை அரசியலில் இருந்து விடுபட்டுள்ளன. அரசியலமைப்பு சட்டத்தை இன்று தலையில் சுமந்து நடனமாடுபவர்கள், தங்கள் ஆட்சியில் அநீதியான சட்டங்களையும், பிற்போக்குத்தனமான நடைமுறைகளையும் பின்பற்றி அதை துாக்கிப்போட்டு நசுக்கினர். சட்டமேதை அம்பேத்கரின் கருத்துகளை காற்றில் பறக்கவிட்டனர். துப்புரவு தொழிலாளர்களுக்கு எதிரான சட்டம் உட்பட, மக்களுக்கு எதிரான பல சட்டங்களை அடையாளம் கண்டு மோடி அரசு அதை ரத்து செய்து வருகிறது. மொபைல் போன்களை, 11 ஆண்டுகளுக்கு முன் நாம் இறக்குமதி செய்தோம். இன்று பெரும்பாலான இந்தியர்கள், நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர். ஆண்டுதோறும், 35 கோடி மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நம்மால், உருவாக்கப்பட்ட யு.பி.ஐ., பண பரிவர்த்தனை, உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை தளமாக மாறி இருக்கிறது. நீங்கள் இந்தியராக இருந்தால், நம் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குங்கள். இவ்வாறு அவர் பேசினார். இரட்டை போனஸ்! ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, அடுத்த தலைமுறை சீர்திருத்தத்தை நோக்கி செல்கிறது. சீர்திருத்தம் என்பது, எங்களைப் பொறுத்தவரை நல்லாட்சியின் விரிவாக்கம். இந்த சீர்திருத்தம், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும், சிறிய மற்றும் பெரிய வணிகங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஜி.எஸ்.டி., சட்டத்தை எளிமையாக்கவும், வரி விகிதங்களை திருத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த தீபாவளிக்கு, ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் நாட்டு மக்களுக்கு இரட்டை போனசை வழங்கும். நரேந்திர மோடி பிரதமர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை