உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தனியார் மருத்துவ கல்லுாரி என்.ஆர்.ஐ., கோட்டாவில் பலே மோசடி! 18,000 போலி அட்மிஷன் போடப்பட்டது அம்பலம்

தனியார் மருத்துவ கல்லுாரி என்.ஆர்.ஐ., கோட்டாவில் பலே மோசடி! 18,000 போலி அட்மிஷன் போடப்பட்டது அம்பலம்

புதுடில்லி : என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்களின் மருத்துவப் படிப்புக்கான இடஒதுக்கீட்டில் முறைகேடு செய்து, 18,000 மாணவர்களுக்கு தனியார் கல்லுாரிகள் சேர்க்கை வழங்கியிருக்கும் அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை, தனியார் கல்லுாரிகளின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது. நாடு முழுதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' நுழைவுத் தேர்வு வாயிலாக நடந்து வருகிறது. முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு 'நீட்' தேர்வை கொண்டு வந்த நிலையில், எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

பணத்தாசை

இந்நிலையில், பின்வாசல் வழியாக சில தனியார் நிறுவனங்கள் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் செய்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. மருத்துவ கல்லுாரிகளில், என்.ஆர்.ஐ., கோட்டா தொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய துாதரகங்களின் உதவியுடன் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அதில், மேற்கு வங்கம், ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் என்.ஆர்.ஐ., கோட்டாவில் முறைகேடு செய்து மருத்துவ மாணவர்களை சேர்க்க, தனியார் கல்லுாரிகளே முகவர்களை நியமித்தது தெரியவந்து உள்ளது. இந்த முகவர்கள், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களை போல, உள்நாடு மாணவர்களுக்கு துாதரக ஆவணங்கள், போலியான வீட்டு முகவரிகளை உருவாக்கி கொடுத்துள்ளனர். அதன் மூலம் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 18,000 மாணவர்கள் வரை சேர்க்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. சில உண்மையான என்.ஆர்.ஐ., மாணவர்களும் முகவர்கள் கொடுக்கும் பணத்திற்கு ஆசைப்பட்டு, இந்த மோசடிக்கு துணைபோயுள்ளனர். அதன் மூலம், என்.ஆர்.ஐ., கோட்டாவில் அவர்களது பெயர்கள் பயன்படுத்தப்பட்டு, போலி மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சோதனை

இது தொடர்பாக தனியார் கல்லுாரிகளில் நடத்தப்பட்ட சோதனையில், போலியான என்.ஆர்.ஐ., சான்றிதழ்கள், அமெரிக்காவில் பணியாற்றும் நோட்டரி அதிகாரியின் பத்திரங்கள் சிக்கியுள்ளன. என்.ஆர்.ஐ., கோட்டாவில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு, என்.ஆர்.ஐ., உறவினர் தான் கல்லுாரி கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், பெரும்பாலான மாணவர்களுக்கு என்.ஆர்.ஐ., குடும்பத்தினர் கட்டணம் செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷா அரசுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் பரிந்துரைத்தனர். ஆனால், அமலாக்கத்துறை குறிப்பிட்ட தனியார் கல்லுாரிகள் மீது இரு மாநில அரசுகளும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேற்குவங்கத்தில் ஒரு தனியார் கல்லுாரியில் நடத்திய சோதனையின்போது 6.42 கோடி ரூபாய் வங்கி வைப்பு தொகை கணக்கில் வராததால், அதை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சொத்துக்கள் முடக்கம்

அதே போல் மேலும் சில கல்லுாரிகளில் நடந்த சோதனையில், 12.33 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் வராத சொத்துகள் இருந்ததால், அவற்றை முடக்கியது. இந்த தனியார் கல்லுாரிகளில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த சான்றிதழ்களை வெளிநாட்டில் உள்ள இந்திய துாதரகங்களின் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்துள்ளனர். அதில் பெரும்பாலான என்.ஆர்.ஐ., கோட்டா சேர்க்கை போலியானவை என்பது தெரியவந்து உள்ளது. தனியார் கல்லுாரிகளில் நடந்த இந்த முறைகேடு நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சிந்தனை
ஆக 26, 2025 15:37

கொள்ளையடிப்பவர்கள் கவனம் கொள்ளையடிப்பது சட்டப்படி சரி என்று நாங்கள் சொல்ல மாட்டோம் ஆனால் சட்டம் கண்டுபிடிக்காத படி தான் கொள்ளையடிப்பவர்கள் கொள்ளையடிக்க வேண்டும் அதில் ஓட்டை வைத்தால் கண்டுபிடிக்கப்பட்டால் நாங்கள் சட்டப்படி தண்டிப்போம் இப்படிக்கு கொள்ளை அடிக்க வந்தவர்கள் எழுதிய இளிச்சவாயன் நாட்டு சட்டம்


அப்பாவி
ஆக 26, 2025 12:34

நடந்தது மே.வங்கம், ஓடிஷாவுல. ஏன் அனாவசியமா திரவிட கதறல்?


அப்பாவி
ஆக 26, 2025 08:20

என்ன ஆச்சரியம்? உக்ளூர் டுபாக்கூரெல்லாம் சீனா, உக்ரைன், இரான்னு போய் டாக்டருக்கு படிக்குறாங்க. அயல்நாட்டு டுபாக்கூரெல்லாம் இங்கே வந்து டாக்டர் படிப்பு.


அப்பாவி
ஆக 26, 2025 08:15

இங்கு வந்து அடிக்கும் வெளிநாட்டு டுபாக்கூர்களெல்லாம் நாளை அங்கே போய் இந்தியாவின் புகழ் பரப்புவார்கள். ஒன்றியத்துக்கு ஜி.எஸ்.டி வந்தால் போதும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 26, 2025 06:15

மத்தியில் பதினோரு ஆண்டுகளாக அரசாளும் நேர்மையான பாஜக அரசிடம் இந்த மோசடியை ஒழிக்க திட்டமே இல்லையா >>>>


உண்மை கசக்கும்
ஆக 26, 2025 05:33

கண்டிப்பாக தமிழக அரசியல்வாதிகளின் மருத்துவ கல்லூரிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஏமாற்றுவார்கள்.


Padmasridharan
ஆக 26, 2025 05:22

இந்த விஷயத்துல உள்ளூர் மக்கள வெளியூர் மக்களாக்கியிருக்காங்க, வோட்டு திருட்டு என்று கூறிய விஷயத்துல உள்ளூர் மக்களை ஒதுக்கியே இருக்காங்க. ஆவணங்கள் போலியல்ல சாமி, அதை கொடுத்தவர்கள்தான் "போலி மனிதர்கள்". செய்திகளில் ஆவணங்களின் மதிப்பீட்டை ஏன் குறைத்து வீசும் சொற்களை உபயோகிக்கின்றீர்கள். இந்த மாதிரி போலி மனிதர்கள் பணத்துக்காக எதையும் செய்வதனால்தான் உயிர்களுக்கும் மரியாதையில்லாமல் போயி பணத்துக்காக மட்டுமே மரியாதை கொடுக்கப்படுகின்றது


Kasimani Baskaran
ஆக 26, 2025 03:51

உலகத்தரம் வாய்ந்த ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் கூட 3 கோடிக்கு மேல் கட்டணம் வசூலிப்பது இல்லை. இவர்கள் அடிக்கும் கொள்ளை கணக்கில் அடங்காதது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை