ஜே.என்.யு., பல்கலை முறைகேடுகள் பேராசிரியர்கள் கடும் கண்டன ம்
புதுடில்லி:டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 'கடந்த பத்தாண்டுகளில் டில்லி பல்கலைக்கழகத்தின் மாண்புகள் சீர்கெட்டுள்ளன. எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. ஆசிரியர்கள் நியமனத்திலும் பல முறைகேடுகள் தென்படுகின்றன' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஜே.என்.யு., பல்கலையின் தற்போதைய நிலை' என்ற பெயரிலான அறிக்கையை, நேற்று முன்தினம், அந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன: கடந்த பத்தாண்டுகளில், இந்த பெருமை மிகு பல்கலைக்கழகத்தின் மாண்புகள் சீர்கெட்டு, துணை வேந்தருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் இந்த பல்கலையின் நிர்வாகம், தலைமை போன்றவை தங்கள் தலையை குனியும் வகையில் செயல்படுகின்றன. பொது கல்வி நிலையம் என்ற நிலை மாறி, துணை வேந்தருக்கு அதிக அதிகாரம் கிடைக்கும் வகையில், பல்கலையின் சட்ட, திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மொத்தம், 326 பணியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதை கண்டறிந்துள்ள நிலையில், 184 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அதிலும், 133 பணியிடங்கள் தகுதியில்லாதவர்களால் நிரப்பப்பட்டுள்ளது. எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்கள் சேர்க்கையும், இந்த காலத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக, 1500 ஆக இருந்த எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்கள் எண்ணிக்கை, 547 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இட ஒதுக்கீடு அடிப்படையில் கூட இது போதுமானதாக இல்லை. இவ்வாறு பல குறைபாடுகளை, பல்கலை ஆசிரியர்கள் கண்டுபிடித்து, தங்கள் அறிக்கையில் பட்டியலிட்டுள்ளனர்.