| ADDED : நவ 19, 2025 02:26 PM
புதுடில்லி: தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் மீது, நீதிபதிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என மொத்தம் 272 பேர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்விகளை காங்கிரஸ் சந்தித்து வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் எம்பி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். போலி வாக்காளர்கள் மற்றும் ஓட்டுத்திருட்டு உள்ளிட்ட புகார்களை கூறிய அவர், பாஜவின் வெற்றிக்கு தேர்தல் ஆணையம் உதவுவதாக குற்றம்சாட்டினார். இதற்கு தேர்தல் ஆணையமும் தகுந்த விளக்கத்தை கொடுத்து வருகிறது. அதேவேளையில், பாஜ உள்ளிட்ட ஆளும் கட்சியினரும் ராகுலின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் மீது, நீதிபதிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என மொத்தம் 272 பேர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ள அந்தக் கடிதத்தில், 'ஓட்டு திருட்டு குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இதன்மூலம், தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு அமைப்புகள் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைக்க முயற்சிகள் நடக்கின்றன,' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் 16 நீதிபதிகள், 123 ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் 133 ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் கையொப்பமிட்டுள்ளனர்.