புதுடில்லி: நாட்டில் எழுந்துள்ள ஊழல் மற்றும் லோக்பால் விவகாரம் தொடர்பாக காங்., பொதுசெயலர் ராகுல் இன்று பார்லி.,யில் விளக்கம் அளித்த போது எதிர்கட்சி எம்.பி.,க்கள் கடும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால் ராகுல் தொடர்ந்து பேச முடியாத நிலை ஏற்பட்டது. காந்தியவாதி அன்னா ஹசாரேயின் கோரிக்கைகளை, நீண்ட இழுபறிக்கு பின், முடிவுக்கு வரும் என எதிர்பார்கக்கப்பட்டது ஆனால் அரசு தரப்பில், விவாதம் நடத்துவது குறித்து பார்லி.,யில் லிஸ்ட் ஆகவில்லை. இது குறித்து யாரும் நோட்டீஸ் வழங்கவில்லை, என பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பன்சிலால் கூறினார். இதனால், போராட்டத்தில் மாற்றம் வரலாம். என்று எதிர்பார்க்கப்பட்டது ஏமாற்றம் ஆனது.ஒரு சட்டம் மட்டும் ஊழலை ஒழித்து விடாது ராகுல் பேச்சு : இன்று மதியம் 12 மணியளவில் காங்., பொது செயலர் ராகுல் லோக்சபாவிற்கு வந்தார். இவர் தனது பேச்சில் கூறியதாவது: ஊழல் ஒழிப்பதில் நல்லதொரு அரசியல் களம் தேவைப்படுகிறது. நாட்டில் ஊழல் விவகாரத்தை முன்னிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய அன்னா ஹசாரேவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஒரு சட்டம் ( லோக்பால் ) மட்டும் கொண்டு வருவதால் ஊழலை முற்றிலும் ஒழித்து விட போதுமானதாக அமைந்து விடாது. வேரோடு ஒழித்து விட முடியாது. ஊழலை ஒழிப்பது என்பது ஒரு சாதாரண விஷயமல்ல. பன்முகம் சம்பந்தப்பட்டது. ஒரு பலமான சுதந்திர தன்மை கொண்ட அரசியல் அமைப்பின் அங்கமாக (தேர்தல் கமிஷன் போல் ) லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். அதே நேரத்தில் பார்லி.,யின் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தக்கூடாது. பார்லி., அதிகாரத்தில் பைபாஸ் வழியாக யாரும் உள்ளே நுழைய அனுமதிக்க முடியாது. இவர் பேசிக்கொண்டிருக்கும் போது எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து கூச்சலிட்டனர். பிரியங்கா கவனித்தார்: பார்லி.,க்கு வரும் முன்னர் ராகுல் பிரதமரை சந்தித்து விட்டு சென்றார். ராகுல் உரை நிகழ்த்தியபோது அவரது சகோதரி பிரியங்கா பார்லி.,க்கு வந்து அவரது உரையை கவனமாக கேட்டார். பார்லி.,யில் ராகுல் பேசிக்கொண்டிருந்த தகவல் ஹசாரேவுக்கு தெரிவிக்கப்பட்டதும், மேடையில் இருந்து எழுந்து வந்தோமாதரம், வந்தேமாதரம், இன்குலாப் என 2 முறை ஆதரவாளர்களை பார்த்து குரல் எழுப்பி பின்னர் அமர்ந்தார்.அறிவுரை தேவையில்லை : பா.ஜ., எதிர்ப்பு : ராகுல் போதனை எங்களுக்கு தேவையில்லை என பா.ஜ., ராகுல் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளது. நாங்கள் பிரதமர் பதில் ஏற்றுக்கொள்ள முடியும். அரசை வழி நடத்தி செல்வது ராகுலா அல்லது பிரதமரா என கேள்வி எழுப்பியுள்ளது. ராகுல் உரை எங்களுக்கு தேவையில்லை, லோக்பால் தான் தேவை என இக்கட்சி தெரிவித்துள்ளது,மலை ஏறுவது முதல் கட்டம் என்கிறார் கிரண்பேடி: ராகுல் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த கிரண்பேடி, லோக்பால் என்பது மிக உயரமானது. இதில் பல மலைகள் ஏற வேண்டியுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக எவரஸ்ட் சிகரத்தை அடையமுடியாது, முதல் கட்ட பணிகளை உடனடியாக துவக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். என ராகுல் உரைக்கு பதில் அளிக்கும் விதமாக தெரிவித்தார். ஊழலுக்கு எதிராக, வலுவான லோக்பால் மசோதாவை உருவாக்க வலியுறுத்தி, கடந்த, 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியவாதி அன்னா ஹசாரேயை சரிக்கட்ட, மத்திய அரசு படாதபாடு படுகிறது. ஹசாரேவோ, 'நாங்கள் தயாரித்துள்ள ஜன்லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்து, விவாதிக்க ஒப்புக்கொண்டால் மட்டுமே உண்ணாவிரதத்தை கைவிடுவேன்' என, பிடிவாதம் பிடித்து வருகிறார்.இந்நிலையில், நேற்று கூடிய பார்லிமென்டின் இரு சபைகளிலும், ஹசாரே விவகாரம் அனல் பறந்தது. லோக்சபாவில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், 'ஹசாரேயை பாராட்டுகிறேன். அவரை வணங்குகிறேன். அவர் உண்ணாவிரதத்தை முடித்து கொள்ள வேண்டும்' என, கோரிக்கை விடுத்தார்.பார்லி கோரிக்கை: பிரதமரின் விளக்கத்தை தொடர்ந்து, பார்லிமென்ட் உறுப்பினர்கள் அனைவரின் சார்பில், 'அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்' என, சபாநாயகர் மீரா குமார் வேண்டுகோள் விடுத்தார். இதை, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் வழிமொழிந்தார். இதைத்தொடர்ந்து, பிரதமரின் தகவலை சுமந்து கொண்டு, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக், நேற்று பிற்பகலில் ராம்லீலா மைதானத்திற்கு சென்றார். உண்ணாவிரதம் இருக்கும் ஹசாரேயை சந்தித்து, 20 நிமிடங்கள் பேசினார். உண்ணாவிரதத்தை முடிக்கும்படி பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோளை ஹசாரேயிடம் தெரிவித்தார். அப்போது, விலாஸ்ராவ்விடம் ஹசாரே , பிரதமருக்கு எழுதிய கடிதம் ஒன்றை கொடுத்தார். இக்கடிதத்தில் ஹசாரே, 'இதற்கு முன், அரசு என்னை இரண்டு முறை ஏமாற்றியுள்ளது. இப்போது மூன்றாவது முறையும் ஏமாற விரும்பவில்லை' என, குறிப்பிட்டிருந்தார்.3 நிபந்தனைகள்: இக்கடிதத்தில், உண்ணாவிரதத்தை கைவிட ஹசாரே மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளார். 1) ஜன்லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்து, அதன்மீது விவாதம் நாளையே (இன்று) நடத்த வேண்டும். 2) மாநிலங்களில் லோக்ஆயுக்தா ஏற்படுவது குறித்த பார்லிமென்டில் விவாதிக்க வேண்டும். 3) கீழ்மட்ட அரசு ஊழியர்கள் உட்பட, அனைத்து அரசு ஊழியர்களையும் லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும். இந்த நிபந்தனைகளை ஏற்கும்பட்சத்தில், உண்ணாவிரதத்தை கைவிடுவதாக, ஹசாரே உறுதிபட தெரிவித்துள்ளார். இருப்பினும், போராட்டம் தொடரும். அதுவரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்றும் கூறியுள்ளார். ஹசாரேயுடன் நடந்த சந்திப்பு குறித்து விலாஸ்ராவ், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் விளக்கினார். பின்னர் பிரதமரிடம், ஹசாரேயுடன் நடந்த சந்திப்பு குறித்து நேரில் விளக்கம் அளித்தார். அத்துடன், ஹசாரே கொடுத்தனுப்பிய கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்தார்.இதில் ஹசாரே குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள் குறித்து பிரதமர் மன்மோகன், மூத்த அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, அந்தோணியுடன் ஆலோசனை நடத்தினார். இதில், ஹசாரேயின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஜன்லோக்பால் மசோதா குறித்த விவாதத்தை உடனடியாக, நாளையே (இன்று) துவக்கும் என எதிர்பர்க்கப்பட்டது. ஆனால் இது குறித்து சபாநாயகர் எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.