| ADDED : நவ 27, 2025 04:59 PM
புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல், இந்தியாவில் உள்நாட்டுப் போரைத் தூண்ட விரும்புகிறார் என பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக நிருபர்களிடம், சம்பித் பத்ரா கூறியதாவது: பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றிற்கு எதிராக ஒரு கதையை உருவாக்குவதற்காக, பாகிஸ்தான், வங்கதேசம், அமெரிக்கா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து காங்கிரஸ் தனது 'எக்ஸ்' (முன்னர் டிவிட்டர்) கணக்குகளை உருவாக்கியுள்ளது. புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பல எக்ஸ் கணக்குகளைப் பற்றிய இருப்பிடங்கள் இந்தியாவிற்கு மாற்றப்பட்டன அல்லது மறைக்கப்பட்டன.மஹாராஷ்டிரா காங்கிரஸின் எக்ஸ் கணக்கு அயர்லாந்தில் உள்ளது. இப்போது அதை இந்தியா என்று மாற்றியுள்ளனர். ஆனால் கணக்கு உருவாக்கப்பட்டபோது, அது அயர்லாந்தில் இருந்தது. ஹிமாச்சலப் பிரதேச காங்கிரஸின் கணக்கு தாய்லாந்தில் உள்ளது. ஆண்ட்ராய்டு செயலி மூலம் இணைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியையும் ஆர்எஸ்எஸ்ஸையும் இழிவுபடுத்தவும், ராகுலை விளம்பரப்படுத்தவும், வெளிநாடுகளில் உள்ள கணக்குகள் செயல்படுகின்றன.சிங்கப்பூரில் உள்ள மக்கள் ராகுலை பிரதமராக்க பாடுபடுகிறார்கள். அவர்கள் வாக்காளர்களோ அல்லது இந்தியர்களோ அல்ல. மேற்கு ஆசியா, சிங்கப்பூர், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த மக்கள் ராகுலை ஆதரிக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து அவருக்கு மகத்துவச் சான்றிதழ்கள் கிடைக்கின்றன. காங்கிரஸ் எம்.பி. ராகுல் இந்தியாவில் உள்நாட்டுப் போரைத் தூண்ட விரும்புகிறார். அவர் வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகப் பேசுகிறார். இவ்வாறு சம்பித் பத்ரா கூறினார்.